தோழமையுடன்

Sunday, May 27, 2012

ஹாஜா! - ஏழைகளை அலங்கரிக்கும் அஜ்மீர் ராஜா!

     வடஇந்தியா முழுவதும் அஜ்மீரிலே அமைந்துள்ள ஒரு மெய்ஞானியின் அடக்கஸ்த்தலம் ஆட்சி செய்து கொண்டிருப்பதை நேரில் கண்டேன் என்றார் வரலாற்று பேராசிரியர் எட்வின் அர்னால்ட்.
    அகன்று பரந்த நெற்றி! ஆத்மாவே நின்று ஆடிக் கொண்டிருப்பது போன்ற கண்கள்! ரோஜாவோ, தாமரையோ என்று ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு அழகு முகம்!  இளம் பிஞ்சு உறுதியான பிடரி, அதன் கீழ் தோள், மார்பு, கால்கள் அனைத்திலுமே வயதுக்கு மீறிய லாவகம்! அப்பப்பா அற்புதம்!

       நடப்போரின் கவனத்தையெல்லாம் ஈர்த்துக்கொண்டு  நடந்து சென்ற அந்த சிறுவரின் கவனம்  வழியிலே இருந்த ஒரு மதரஸாவின் வாசலில் நிலை குத்தி நின்றது. விரைந்து நடந்து அவருடைய கால்களும் பின் வாங்கின!

     “முயீனுத்தீன்! விரைந்து நடவும் பெருநாள் தொழுகைக்கு நேரமாகிவிட்டது ” இது தந்தையின் குரல்.

     எனினும் மைந்தரின் நடைமுன்னேறியும் அவருடைய முகம் பின்புறமாக திரும்பி கவனிப்பதைப் பார்த்துவிட்டார் தந்தை. மகனுடைய கவனம் எங்கே செல்கிறது என்று அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

    “என்ன முயீனுத்தீன் என்ன ?” தந்தை சிறிது அதட்டலாகவே கேட்டுவிட்டார். மைந்தருக்கு தொழுகையின் அக்கரை இருக்க வேண்டுமே என்பது அவரது அக்கரை.

   அந்த மைந்தரோ தந்தையின் கரத்திலிருந்து தம் தளிர்க்கரத்தை விலக்கிக் கொண்டு திரும்பி நடந்தார். தந்தையார் வியப்புடன் திரும்பி நின்றார். மைந்தர் அந்த மதரஸாவின் வாசலுக்குச் சென்று புகுந்தார்.

    தூண் மறைவிலே ஒளிந்து நின்று கொண்டிருந்த தம் வயதையொத்த ஒரு சிறுவனை கைகளால் பற்றி வெளியிலே இழுத்தார். மைந்தரின் செயலை வியப்போடு கவனித்தபடி நின்றிருந்தார் தந்தை.

   “முஷ்தாக்! நீ ஏன் பள்ளிவாசலுக்கு வரவில்லை?” இது முயீனுத்தீனின் கேள்வி!

   “நீ போ! உன் தகப்பனாரைக் காத்திடச் செய்யாதே, எனக்கு புத்தாடை எதுவும் இல்லை. இருக்கும் ஆடையும் கந்தலாக இருக்கிறது!”

   “ஏன் உன் தகப்பனார் வாங்கித் தரவில்லை!”

   “இல்லை முயீனுத்தீன், என் தகப்பனார் தான் இறந்து விட்டார்களே! உமக்குத் தெரியாதா? என் தாயார் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.”

   முயீனுத்தீனின் கண்களில் கண்ணீர்  வடிகிறது. “முஷ்தாக் அணிந்து கொள் என் மேலாடையை” தந்தையைக் கவனித்துக் கொண்டே தமது வெல்வெட் கோட்டை கழற்றி முஷ்தாக்கின் மீது அணிகிறார் முயீனுத்தீன்!

   நிலைமையைக் கண நேரத்தில் ஊகித்து விட்டார் கியாஸுத்தீன். உள்ளாடையையும் சராயையும் உடுத்துவரும் மைந்தரை ஒரு கையில் பிடித்துகொண்டு வெல்வெட் மேலாடை அணிந்து வரும் அநாதை சிறுவனையும் மறு கையில் பற்றியபடி கியாஸுத்தீன் பள்ளிவாசலை நோக்கி விரைகிறார்கள்.

   சுபுஹானல்லாஹி வல்ஹம்ந்து லில்லாஹி……..

   கியாஸுத்தீன் அவர்களுடைய உள்ளத்திலே இனம் புரியாத உணர்வுகள் பொங்கிப் பொங்கி வருகின்றது!

   “தூயவனே! புகழுக்குரியவனே! இறைவா! இந்த இளமைப் பருவத்திலேயே இளகிய  இதயமும் ஏழைகளின் மீது நேசமும் பாராட்டக்கூடிய மைந்தரை எனக்குத் தந்திருக்கிறாய்! இறைவா எங்கள் நாயகம் ரசூல் (ஸல்) அவர்கள் : ‘இறைவா என்னை ஏழைகளோடு மரணிக்கச்செய்து ஏழையரோடே மறுமையில் எழுப்பு’ என்றார்களே! இறைவா அந்த நேசரின் நேயரா என் செல்வன்!”.

   கியாஸுத்தீன் நன்றிக் கண்ணீர் பார்வையில் துளிரிட பள்ளிவாசல் படிகளை மிதித்தபோது வாசலிலிருந்து  ஒரு மஜ்தூப் (இறைகாதலில் தன்னிலை இழந்த ஞானி) சப்த மிட்டபடி வெளியே ஓடுகிறார்.

    கரீபு நவாஸ்……..கரீபு நவாஸ்….கரீபு நவாஸ்!     (ஏழைகளை அலங்கரிப்பவர்!)  

நன்றி:( மாபெரும் ஜோதி ஹாஜா முயீனுத்தீன் ஷிஸ்தி அஜ்மீரி எனும் எம்.ஏ.ஹைதர் அலி  M.A., காதிரி அவர்கள் எழுதிய நூலிலிருந்து நன்றியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது)

 0 0 0 0
  

இறையல்லாத ஒன்று அல்லது இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு இறைநேசர் தன் தானே இறைவனின் சக்தியின்றி யாருக்கும் எந்த லாபத்தையும், நஷ்டத்தையும் கொடுக்க முடியும் அல்லது சிருஷ்டிகள் தன் தானே இறைவனின் சக்தியின்றி எந்த ஒரு வேலையையும் சிறிதளவேனும் செய்ய முடியும் என்று எண்ணுவது இறைநெருக்கத்தை விட்டு தூரமாக்கும் மறைமுகமான இணைவைப்பாகும் (ஷிர்கே கஃபி).

இவை ஹாஜா முயினுத்தீன் ஷிஸ்தி அஜ்மீரி (ரலி) அவர்கள் காலத்திலிருந்து செவிவழியாக பாதுகாக்கப்பட்டு வந்த எங்கள் ஷிஸ்தியா காதிரியா ஆன்மீக பாதையின் ஞானபாடங்களில் உள்ள வரிகள்.

 “உங்களையும் உங்கள் செயல்களையும் அல்லாஹ் தான் படைத்தான் ” எனும் அருள் மறை வாக்குடன் ஒப்பிட்டு உணர வேண்டியவை இந்த அற்புத வரிகள்.

'உங்கள் செயல்கள்' என்பது படைப்பினங்ளுக்கு செயல்கள் உண்டென்பதை வலியுறுத்துகிறது. ஆனால் அது வெளியாவதற்கு இறைவனால் அந்த செயல் படைக்கப்பட வேண்டும் என்பது அவசியம்.

வெளிச்சம் தருவது விளக்கின் செயல்.ஒவ்வொரு வினாடியும் விளக்கையும் அதன் வெளிச்சதையும் வெளியாக்குவது இறைவன் செயல்.

தாகத்தை போக்குவது நீரின் செயல். ஒவ்வொரு வினாடியும் நீரையும் அதன் தாகம் போக்கும் குளிச்சியையும் படைப்பது இறைவன் செயல்.

ஆக வெளிப்படையாக யாரிடத்தில் பெற்றாலும் அந்த சிருஷ்டியின் மூலம் கொடுப்பவன் இறைவன் தான் என்பதை உணராவிட்டால் அது மறைமுகமான இணைவைப்பாகிவிடும்.

என் அன்பு தந்தையாரின் மறைவுக்குப் பின் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டிய பொருளாதார நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. புது டெல்லியில் ஒரு இன்டர்வியூவுக்கு சென்று விட்டு அப்படியே அஜ்மீருக்கு செல்லும் பாக்கியமும் கிடைத்தது.

மறைந்தும் மறையாமல் வாழும் அந்த தவராஜரின் அருள் வாசலில் முன் நின்றேன்.

அவர்கள் பார்க்கும் விழியாக அவனிருக்க அவர்கள் அல்லாஹ்வை கொண்டல்லவா பார்க்கிறார்கள்!.

அவர்கள் கேட்க்கும் செவியாக அவனிருக்க அவர்கள் அல்லாஹ்வை கொண்டல்லவா கேட்கிறார்கள்!.

நான் அவர்களை பார்க்க முடியாவிட்டாலும், லட்சக்கணக்கான இதயங்களில் ஆன்ம ஒளியேற்றிய அந்த ஞானசூரியனின் பார்வையின் முன் நிற்கின்றோம் என்ற உணர்வுடன்.... “ யா கரீபே நவாஸ்! (ஏழைகளை அலங்கரிப்பவரே!) உங்கள் வாசலுக்கு ஒரு கரீப் (ஏழை) வந்திருக்கின்றேன்…. ”என்றேன். உணர்வு மிகுந்தது. அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை.

ஊர் திரும்பிய ஒரிரு வாரங்களிலேயே எனக்கு சிஷெல்ஸ், துபாய், சவுதி மூன்று இடங்களிலிலும் வேலை கிடைத்தது. எதை தேர்தெடுப்பது என திகைப்பு ஏற்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.  ஹாஜாவின் போர்வையில் இறைவன் செல்வ செழிப்பை தந்தான்.

அது மட்டுமா?

சிறு வயதில் பைத்து சபாவில்

 “ஹக்கினில் ஹக்காய் நின்றவா!
ஹக்குல் யக்கீனில் நிறைந்தவா!
எக்காலம் திக்ரு முழக்கமாய்
ஈடேற்றும் காமில் ஹாஜாவே! ‘’

எனும் பைத்தை பொருள் தெரியாவிட்டாலும் உணர்ச்சியுடன் பாடுவோம்.

எங்களையே அறியாமல் நாங்கள் வைத்த கோரிக்கை. 

இறைவனின் கருணை கொடுப்பதற்கு சாக்கு போக்கு தேடுகிறது என்பார்கள் என் குரு நாதர் ஃபைஜிஷா நூரி(ரஹ்).

விலைமதிப்பில்லா ஷிஸ்தியா தரிக்காவை எங்களுக்கு தந்து ஹாஜாவின் (ஃபைஜியின்) போர்வையில் இறைவன் ஆன்ம செழிப்பையும் வாரி வழங்கினான்.


அல்ஹம்து லில்லாஹ் - எல்லா புகழும் இறைவனுக்கே!


இறைவா! உன் நேசர் ஹாஜா அவர்களின் பொருட்டால் எங்கள் அனைவருக்கும் பூரண ஞானமும், இறையச்சத்துடன் கூடிய இனிய நல்வாழ்வும் தந்தருள்வாயாக! ஆமீன்!

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

15 comments:

கிளியனூர் இஸ்மத் said...

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்ணியமும் சங்கையுமிக்க ஹாஜா முயினுத்தீன் ஷிஸ்தி அஜ்மீரி (ரலி) (கரீபு நவாஸ்) அவர்களின் ரவ்லாவை தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன்...இன்னும் என் நினைவில் சுவர்க்கமாக அந்த தினங்கள் நிழலாடுகிறது.!

பகிர்வுக்கு நன்றி!

HM Rashid said...

// ஹாஜாவின் போர்வையில் இறைவன் செல்வ செழிப்பை தந்தான்//.-அல்ஹம்துலில்லாஹ்

ஆபிதீன் said...

அஜ்மீரில் வாழும் ரோஜா...
http://abedheen.wordpress.com/2010/04/06/smakader-haja/

பாவா ஷரீப் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அஜ்மீர் நாயகத்தின் அடியார்களின் மீதுள்ள
அன்பை என்னவென்று சொல்வது

என் பெரியம்மா வின் கனவில்
என் தாய்க்கு ஆண் குழந்தை தான் (நான்)
பிறக்கும் என்று முன்னரே
அறிவித்தது அஜ்மீர் நாயகத்தின்
கராமத் என்னவென்று சொல்வது

நல்ல பதிவு

suvanappiriyan said...

சலாம்!

// ஹாஜாவின் போர்வையில் இறைவன் செல்வ செழிப்பை தந்தான்//.

ஹாஜாவின் போர்வையிலெல்லாம் ஒண்ணும் இல்லே பாய்!

அப்போ நீங்க படிச்ச படிப்புக்கோ தெரிந்த தொழிலுக்கோ முக்கியத்துவம் இல்லை என்று சொல்கிறீர்களோ!

எனது திறமைக்கேற்ற வேலையை கொடுத்து செல்வத்தை அதிகரிக்க வைத்த அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும் என்று வர வேண்டும்.

//என் பெரியம்மா வின் கனவில்
என் தாய்க்கு ஆண் குழந்தை தான் (நான்)
பிறக்கும் என்று முன்னரே
அறிவித்தது அஜ்மீர் நாயகத்தின்
கராமத் என்னவென்று சொல்வது//

அப்படியா! அப்போ இத்தனை பேர் டாக்டர் தொழில் பண்றது படிக்கிறது எல்லாம் தேசையில்லாததது என்கிறீர்களாக்கும். நல்லது.

புல்லாங்குழல் said...

அன்பு சுவனப்பிரியன் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!

இஸ்லாத்திற்கு எதிரான வாதங்களுக்கு அருமையான பதில்களை முன் வைக்கும் அன்பு நண்பரே!உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

1. குர்பே நவாஃபில் நிலையை அடைந்தவர்களை. அவர்கள் கேட்டால் நான் தருவேன் என இறைவன் சொல்லுவதாக வருகிறது ஹதீஸ்.

2. முஃஜிஸா, கராமத்துக்கு பின் இருப்பது இறைவனின் குத்ரத்.

உ.ம். வானத்திலிருந்து மன்னு சல்வா இறங்கியது.

பயிர் செய்தவனுக்கு விளைச்சலை தருவது இறைவனின் சுன்னத்.

நபிமார்கள், வலிமார்கள் மூலம் வெளியாகும் அறபுதங்கள் இறைவனின் குத்ரத்தை சார்ந்தது.

சக்தியடங்களும் இறைவ்னுக்கே சொந்தம் என்பதை நினைவில் கொள்க.நமது திறமையும் இறைவனின் கருணைதான்.நம்போன்றவர்களில் வெளியாகும் சக்தியை வெளியாக்குவது இறைவனின் சுன்னத்.

இறையல்லாத ஒன்று அல்லது இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு இறைநேசர் தன் தானே இறைவனின் சக்தியின்றி யாருக்கும் எந்த லாபத்தையும், நஷ்டத்தையும் கொடுக்க முடியும் அல்லது சிருஷ்டிகள் தன் தானே இறைவனின் சக்தியின்றி எந்த ஒரு வேலையையும் சிறிதளவேனும் செய்ய முடியும் என்று எண்ணுவது இறைநெருக்கத்தை விட்டு தூரமாக்கும் மறைமுகமான இணைவைப்பாகும் (ஷிர்கே கஃபி).

நீங்கள் மாற்று கருத்துகளை படிப்பவர் என நம்புகின்றேன். புல்லாங்குழலையும் கொஞ்சம் ஆழ்ந்து வாசித்து பாருங்களேன் என அன்புடன் அழைக்கின்றேன்.

Feroz said...

//என் பெரியம்மா வின் கனவில்
என் தாய்க்கு ஆண் குழந்தை தான் (நான்)
பிறக்கும் என்று முன்னரே
அறிவித்தது அஜ்மீர் நாயகத்தின்
கராமத் என்னவென்று சொல்வது

நல்ல பதிவு// அன்பின் பாவா ஷரீப். உங்களிடமும் உங்களைபோன்று பின்பற்றும் இந்த கொள்கையை நூருல் அமீன் போன்ற எண்ணற்ற சகொக்களிடம் ஒரு கேள்வி, தர்காவில் குண்டு வெடிப்பு நடக்கும் முன்பு கனவில் வந்து சொல்லாதது ஏன் என்று அறிய ஆவல். நட்புடன்

புல்லாங்குழல் said...

அன்பு பெரோஸ்,

ஹஜ்ஜின் போது கூடாரங்கள் தீ பற்றி எரிந்ததே அதை ஏன் அல்லாஹ் தடுக்கவில்லை என கேட்பீர்களா தோழா!.

அல்லாஹ்வின் நாட்ட திட்டங்களுக்கு பின்னுள்ள ரகசியத்தை யார் அறிவார்!

ஹாஜா நாயகம் குண்டு வெடிப்பை கனவில் சொல்ல வேண்டும் என அல்லாஹ் நாடி இருந்தால்/ அந்த செயலை படைத்திருந்தால் அதுவும் கூட நடந்திருக்கும்.

இறையல்லாத ஒன்று அல்லது இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு இறைநேசர் தன் தானே இறைவனின் சக்தியின்றி யாருக்கும் எந்த லாபத்தையும், நஷ்டத்தையும் கொடுக்க முடியும் அல்லது சிருஷ்டிகள் தன் தானே இறைவனின் சக்தியின்றி எந்த ஒரு வேலையையும் சிறிதளவேனும் செய்ய முடியும் என்று எண்ணுவது இறைநெருக்கத்தை விட்டு தூரமாக்கும் மறைமுகமான இணைவைப்பாகும் (ஷிர்கே கஃபி) என்பது தான் எங்கள் கொள்கை.

நட்புடன்,

பாவா ஷரீப் said...

//ஹஜ்ஜின் போது கூடாரங்கள் தீ பற்றி எரிந்ததே அதை ஏன் அல்லாஹ் தடுக்கவில்லை என கேட்பீர்களா தோழா!.
//

super ameen sir

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!

நமக்கு முன் மரணித்தவர்கள் நாம் அறிய‌ முடியாத வேறொரு வாழ்க்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான்! நாம் பேசுவதை செவிமடுக்கவோ, அதன் மூலம் இறைவனிடம் பரிந்துரைக்கவோ, கேட்பதற்கு பதிலளிக்கவோ அவர்களால் இயலாது. நமக்கு அவர்கள் பாதுகாவலர்களும் அல்லர்! இவை அனைத்தும் நம் சொந்த யூகமல்ல சகோதரர்களே! அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொன்னவையாகும்.

எனவே அவர்களில் யாரையும் மகான்கள், அவ்லியாக்கள் என்று துதிபாடியும், அவர்கள் மூலம்தான் அல்லாஹ்விடம் நம் தேவைகளைக் கேட்கவேண்டும் என்ற தவறான பாதையில் நம் வாழ்நாளைக் கழித்தும் மறுமையில் நஷ்டவாளிகளாக ஆகிவிடாமல், நம் பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் நம் வாழ்க்கையை அமைத்து சுவனபதியை அடைய முயற்சி செய்வோம் சகோதரர்களே! தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குர்ஆன்-ஹதீஸ்களை படித்து, சிந்தித்துப் பாருங்கள்!

"கியாமத் நாள்வரை தமக்கு பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்." (அல்குர்ஆன் 46:5)

"அவர்கள் இறந்தவர்கள், உயிருடன் இருப்போர் அல்லர். ‘எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்" (அல்குர்ஆன் 16:21)

ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் கூறுவர். அதன் பின்னர் 'புது மணமகனைப் போல் நீ உறங்கு! அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு!' எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுருக்கம்) ஆதாரம்: அஹ்மத், திர்மிதீ

‘அவனே அல்லாஹ் உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தரமாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.’ (அல்குர்ஆன் 35:13,14)

கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: முஸ்லிம்‍‍-1610)

"குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை". (அல்குர்ஆன் 35:19-22)

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களைத் தம் பாதுகாவலராக எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன்-18:102)

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத்தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி 427, 434, 1341, 3873)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 39:3)

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:18)

Flavour Studio Team said...

//சக்தியடங்களும் இறைவ்னுக்கே சொந்தம் என்பதை நினைவில் கொள்க.நமது திறமையும் இறைவனின் கருணைதான்.நம்போன்றவர்களில் வெளியாகும் சக்தியை வெளியாக்குவது இறைவனின் சுன்னத்.////
///இறைவனின் சுன்னத்.//// ??????????????

எனக்கு தெரிந்து சுன்னத் என்றால் நபி வழி...!!

அல்லாஹ்வுக்கே நபி வழியா??/ இல்ல நான் தப்பா புரிஞ்சிகிட்டேனா???

Flavour Studio Team said...

///நான் அவர்களை பார்க்க முடியாவிட்டாலும், லட்சக்கணக்கான இதயங்களில் ஆன்ம ஒளியேற்றிய அந்த ஞானசூரியனின் பார்வையின் முன் நிற்கின்றோம் என்ற உணர்வுடன்....////

"குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை". (அல்குர்ஆன் 35:19-22)

புல்லாங்குழல் said...

சகோதரி ஷர்மிளா ஹமீத்

1. சுன்னத் என்றால் நாம் நடைமுறையில் நபிவழியை குறிப்பிட பயன்படுத்துகிறோம். அந்த வகையில் தாங்களின் விளக்கம் சரியே!.

சுன்னத் என்றால் 'வழி' என்று பொருள். அல்லாஹ்வின் சுன்னத் என்றால் அல்லாஹ்வின் வழிமுறையை குறிக்கும்.

2. மண்ணறையில் உள்ளவர்களை மட்டுமல்ல உயிரோடு வாழ்பவர்களையும் நபி (ஸல்) அவர்களோ வேறு யாருமோ செவியேற்க செய்வதில்லை. அல்லாஹ் தான் செவியேற்கச் செய்கின்றான்.

நீங்கள் மாற்றுக் கருத்துகளை படிப்பவர் என்றால் உங்களுக்கு கீழ் உள்ள் ஈபுக் சுட்டியை பரிந்துரைக்கின்றேன்.

http://safaresunnah.com/index.php/e-book/doc_download/20-irai-vali-il-irai-nesarghal

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும்...சகோ
சகோ அஸ்மா சொன்னது தன சொந்த கருத்து அல்ல, குரான் மற்றும் ஹதீஸில் உள்ளதைத்தான் சொல்கிறார் இதற்கு தங்களின் விளக்கம் என்ன ?
சுட்டிகளை சுட்டிக்காட்டாமல், நேரிடையான விளக்கத்தை கொடுக்கவும் ..

புல்லாங்குழல் said...

அன்பு சகோதரர் நாசருக்கு, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!. சகோதரி அஸ்மாவிற்கு பதில் எழுத ஆரம்பித்தது ஒரு தனி இடுகையாக ஆகிவிட்டது அதை அன்பு சகோதரி அஸ்மாவுக்கு என்ற சுட்டியை பார்வையிடவும்.
http://onameen.blogspot.com/2012/06/blog-post.html

மேலும் ஏகத்துவ மெய்ஞானம் என்ற சுட்டியையும் பார்வையிடுங்கள். நன்றி!
வஸ்ஸலாம்.