தோழமையுடன்

Wednesday, October 19, 2011

ஆன்மீக குரு சகவாசத்தின் நோக்கம்

ஆன்மீக குரு சகவாசத்தின் நோக்கம் என்ன? அனுமதிக்கபட்ட உலக இன்பங்களை துறக்கும் துறவறமா? என்றால் பதில் நிச்சயமாக இல்லை என்பது தான்.  

இறைனிடம் லட்சக்கணக்கில் வேண்டுமென பிட்சைக்காரத்தனமாக கேட்காமல் கோடி கணக்கில் வேண்டுமென கோரிக்கை வையுங்கள். நம் அல்லாஹ் பிச்சைகாரனல்ல சர்வலோக சக்கரவர்த்தி என்பார்கள் என் ஆன்மீக குருநாதர்  ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள்.


பின் ஆன்மீக குரு சகவாசத்தின் நோக்கம் தான் என்ன என்றால்,
சூஃபி ஞானிகள் ஒற்றை வரியில் ‘யாது ஹக் அலத் தவாம் அவுர் யாஃப்தே ஹக்’ என்பார்கள்.
இதன் பொருள் சதா இறைவனை ஞாபகம் செய்வதும். மேலும் (அப்படி ஞாபகம் செய்யும்) இறைவனை அடைந்து கொள்வதும் என்பதாகும்.

யாது ஹக் – சதா இறைவனை ஞாபகம் செய்தல்

ஃபத்குருல்லாஹ கஸீரன் லஅல்லக்கும் துஃப்லிஹூன் -  அதிகமதிகம் இறைவனை ஞாபகம் செய்யுங்கள் நீங்கள் வெற்றி பெற்றவர்கள் ஆக கூடும்  என்கிறது இறைவேதம்.

‘அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூருங்கள்’ என்பதற்கு அறிவுள்ள காலமெல்லாம் அவனை மறந்திருக்க நமக்கு அனுமதி இல்லை என இப்னு கஸீர்(ரஹ்) போன்ற திருமறை விரிவுரையாளர்கள் கூறுகின்றார்கள். “மீனுக்கு தண்ணீர் எவ்வாறு அவசியமோ அவ்வாறே உள்ளத்திற்கு இறைவனின் ஞாபகம்(திக்ரு) அவசியம்” என்பதாக பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்.  அவர்களின் கொடுக்கல் வாங்கல்களோ, வியாபாரமோ இறைநினைவை விட்டும் அவர்களை திசை திருப்பவில்லை. நின்ற நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும் சாய்ந்த நிலையிலும் அதாவது வாழ்வின் எல்லா நிலையிலும் இறைவனை முன்வைத்து வாழ்ந்தார்கள் என்பது தான் குர்ஆன் கூறும் நபித்தோழர்களின் (சஹாபாக்களின்) வாழ்க்கையாக இருந்தது. 

இறை சிந்தனை எதற்காக ?

ஃபத்குருல்லாஹ கஸீரன் லஅல்லக்கும் துஃப்லிஹூன் என்ற இறைவசனம் வெற்றி பெருவதற்காக இறைவனை ஞாபகம் செய்யுங்கள் என்கிறது. இன்னொரு இடத்தில் இறைவனை ஞாபகம் செய்வது கொண்டு மாத்திரமே உள்ளங்கள் அமைதியுறுகின்றன  என்கிறது அல் குர்ஆன். வெற்றியும், நிம்மதியும் வேண்டாத மனிதர்கள் உண்டா?

இறைவனை மறந்தவன் இதயத்தை இழந்தவன்

இறைவேதம் இறைவனை மிகவும் நெருக்கமாக இருப்பவன். நம் கூட இருப்பவன் என அறிமுகம் செய்கிறது. புலன் உணர்வுகளின் வழியாக பெற்ற பகுத்தறிவோ இறைவனின் நெருக்கத்தை நாம் உணர்வதற்கு துணை செய்வதாயில்லை.  

இறைவனின் நெருக்கத்தை உணர நமக்கு இறைவன் வழங்கிய அமைப்பு ‘இதயம்
இறைவேதம் இதயம் உடையவர்களுக்கு இதில் (இறை அத்தாட்சிகளில்) ஞாபகமூட்டல் உள்ளது என்கிறது. இதன் பொருள் இறை அத்தாட்சிகளை புறக்கணித்து மறந்து வாழ்பவர்களை இதயம் இல்லாதவர்கள் என்கிறது இறை வேதம்.

இறைசிந்தனை(திக்ரு) உடையவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு உயிருள்ளவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்கிறது நபிமொழி.

இங்கே குறிப்பிடப்படுவதும்  உடலின் மரணமல்ல. உள்ளத்தின் மரணம். 

உள்ளத்தின் மரணம். இல்லாமல் போகும் இதயம் என்பதன் பொருள் என்ன?

இறைவேதம் இதயம் உடையவர்களுக்கு இதில் (இறை அத்தாட்சிகளில்) ஞாபகமூட்டல் உள்ளது என்கிறது என பார்த்தோம் அல்லவா? யாருக்கு ஞாபகமூட்ட முடியும். ஒன்றை ஏற்கனவே அறிந்தவர் அதை மறந்திருந்த்தால் தானே ஞாபகமூட்டல் என சொல்வது சரியாகும். அப்படி என்றால் நாம் இறைவனை அறிந்தவர்களா? ஆம்.ஆன்மநிலையிலேயே நீ தான் எங்கள் ரப்பு என சாட்சி சொல்லியது மனிதம். மனித இதயத்தின் இயற்கையான அமைப்பு இறைவனின் ஏகத்துவ ஒருமைக்கு சாட்சியாய் இருப்பது. இந்த பாக்கியமான பிறவி நிலையின் இழப்பை தான் ‘உள்ளத்தின் மரணம். இல்லாமல் போகும் இதயம்’ என குறிப்பிடப்படுகின்றது.

யாஃப்தே ஹக் – இறைவனை அடைந்து கொள்ளுதல்

 (நபியே!) இறைவனை மறந்து விட்டவர்கள் போன்று ஆகி விடாதீர்கள். ஏனெனில் அவர்கள் தங்களை மறக்கும் படி (இறைவன்) செய்து விட்டான்.அத்தகையோர் தான் ஃபஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவர்கள்.59:19 என்கிறது வேத வரிகள்.

ஃபாஸிக் என்பது ஃபிஸ்க் என்பதிலிருந்து வந்தது ஃபிஸ்க் என்றால் பிரிவினை என பொருள்.(தப்ஸீர் ஹமீது)

அல்லமா யூசூப் அலி (ரஹ்) தன் திருமறை மொழிபெயர்ப்பின் மேலே உள்ள இறைவசனத்தின் அடிக் குறிப்பில்,
To forget God is to forget the only Reality. As we are only reflected realities how can we understand or do justice to or remember ourselves when we forgot the very source of our being. (Allama Yousus Ali (rah) Quran translation Page 1527.) என குறிப்பிடுகின்றார்கள். இவைகள் ஞானம் தோய்ந்த விளக்கங்கள். முறையான இரைஞானியரின் மூலம் இதன் விளக்கம் பெறுவது நலம்.

சுருக்கமான விளக்கம். மறதி என்பது இறை நெருக்கத்தை உணரா பிரிவில் நம்மை தள்ளிவிடும் என்பது தான்.

அவ்வாறின்றி சிந்தனை முழுமையும் இறைமயமாய் விளங்குவது தான் இறைநம்பிக்கையாளனின் நிலை. இதை தான்‘நம்பிக்கையாளனின் உள்ளம் இறையாசனம்’ என்கிறது நபிமொழி. இப்படி அதிகமதிகம் செய்யப்படும் ஞாபகத்தின் விளைவு என்ன? குர்பே நவாஃபில் என சொல்லப்படும் இறைவனை அடைந்து கொள்வது தான் ஞாபகத்தின் உயர்வான விளைவு. என்ன அது குர்பே நவாஃபில்? பார்க்கும் விழியாக, பற்றும் கரமாக இன்னும் சொன்னால் நடக்கும் காலாக அவன் இருந்து நம் காரியங்களை ஆற்றித் தரும் அற்புதமான நெருக்கம் அது. நீ எங்கிருந்தாலும் உன்னுடன் நானிருக்கிறேன் என்ற இறைவனின் வார்த்தகளின் உண்மை நம் உணர்வாய் மாறும் தருணமது. இது தான் ஆன்மிக சகவாசத்தின் நோக்கமாகும்.

இதற்கெல்லாம் ஆரம்பமாக ஞாபகம் செய்வதற்கு ஞாபகம் செய்யப்படுபனைப் பற்றிய விளக்கம் தேவை. அதற்கு

“ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.” (25:59) என்ற திருமறை வசனத்திற்கேற்ப செயல்பட வேண்டியது அவசியம்.

இறைசிந்தனையை தூண்ட ஆன்மிக குரு அவசியமா?

இறைசிந்தனையை தூண்ட ஆன்மிக குரு அவசியமா? என்பதை பார்ப்போம்.
ரஜினிகாந்த் படம் பார்த்து விட்டு சிலர் தலையை ஸ்டைலாக கோதிக் கொண்டு நடப்பதை நடை, உடை, பாவனைகளில் அவரைப் போலவே நடப்பதை பார்க்கின்றோம்.
கராத்தே படங்களை பார்த்து விட்டு ஆ..ஊ… என கத்தி கொண்டு சிலர் கையை, காலை ஆட்டுவதை பார்க்கின்றோம்.

அற்ப சகவாசங்களே நம்மை இப்படி ஆட்கொள்ளும் பொது இறைநேச செல்வர்களின், ஆன்மிக குருநாதர்களின் சகவாசம் என்ன செய்யும்?

இறை சிந்தனையை நம்மில் ஏற்படுத்தி, முஹம்மது ரசூலுல்லாவின் நடை, உடை, பாவனைகளை நம்மில் ஆசையுடன் கொண்டு வரும்.

நம் வாழ்வியல் கண்ணோட்டத்தை வடிவமைப்பதில்  தோழமையின் பங்கு மகத்தானது என்பதால் நம் இறைநம்பிக்கை உறுதி பெறவும், இயன்றவரை தக்வா செய்யவும் நமக்கு தூண்டுதலாக இருக்கும் மெய்யடியார்களின்  தொடர்ச்சியான தோழமை வாழ்நாளெல்லாம் நமக்குத் தேவை என்பதை

ஈமான் கொண்ட விசுவாசிகளே நீங்கள் அல்லாஹுவை அஞ்சுங்கள்(தக்வா செய்யுங்கள்) மேலும் சாதிக்கீன்களுடன் (தோழமை கொண்டு) இருங்கள்.(9:119) என்னும் திருவசனம் வலியுறுத்துகிறது.

0000
வெள்ளி கிழமை இரவில் வீட்டில் குடும்பத்தினர்கள் ஒன்றாக அமர்ந்து இறைவனை ஞாபகம் செய்வதுண்டு. ஞாபகம் செய்வது என்றால் இறை திருநாமங்களை, இன்னும் லாஇலாஹா இல்லல்லாஹ் போன்ற சங்கை பொருந்திய சில சொற்றொடர்களை ஜபிப்பது மட்டுமல்ல. இறைவனைப் பற்றி (அவனது தாத், சிபாத் பற்றி) , அவன் அருட்கொடைகளைப்பற்றி யாராவது ஒருவர் உறையாற்ற மற்றவர்கள் கேட்போம். எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்பதால் பிள்ளைகளையும் பேசச் செய்வோம். 

அப்போது பள்ளியில் படிக்கும் என் மகள் பேசும் போது, ‘விமானங்களில் பறக்க வேண்டாம் என இறைவன் சொல்வதில்லை. பறக்கும் போதும் என்னை மறக்க வேண்டாம் என தான் இறைவன் சொல்கின்றான்’ என என் குருநாதர் சொன்ன வாசகங்களை அடிக்கடி நினைவு கூறுவாள். இதை வெறும் எதுகை மோனைக்காக அவள் சொல்லவில்லை என்பதை அவள் முகத்தின் தீவிரம் உணர்த்தும்.

எதற்காக இதை சொல்லுகின்றேன் என்றால் ஆன்மீக குருநாதர்கள் இறையுணர்வில் ஊறிப்போனவர்கள்அவர்களின் போதனை வெறும் வாயிலிருந்து வரும் வாசகங்கள் அல்ல. அவர்களின் இதயத்தின் உணர்வுகளை அம்பாக்கி நம் இதயத்தை பாய்ச்சும் வல்லமை படைத்தவை.

 அவை சிறு பிள்ளைகள் மனதிலும் இறை சிந்தனையை தூண்டு விடுகின்றன.
அவர்களை பார்த்தாலே மனம் இறை சிந்தனையின் பக்கம் திரும்பும். அத்தகைய ஆன்மீக குருமார்களின் தொடர் சகவாசமின்றி இறைவனை அதிகமதிகம் ஞாபகம் செய்வது என்பது இயலாத காரியம்.

எல்லாம் வல்ல இறைவன் அவனை சதா ஞாபகம் செய்து அவனை அடைந்து வாழும் (முகர்ரபீன்) கூட்டத்தில்  நம்மை சேர்ப்பானாக! ஆமீன்!.








No comments: