தோழமையுடன்

Wednesday, December 29, 2010

பொய்சாட்சியும் மெய்சாட்சியும்


நீங்கள் அமெரிக்க நாட்டுக்கு செல்கின்றீர்கள். ஒபாமாவிடமிருந்து அவரை சந்திக்க தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவரிடம் சென்று உங்கள்  தேவைகளை சொல்கின்றீர்கள். அவரை சந்திக்கும் முன் உங்கள் உணர்வு எப்படி இருக்கும்.? சந்தித்து கோரிக்கைகளை வைத்தபின் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?.சந்திக்கும் முன் ஒபாமா எவ்வளவு பெரிய ஆள் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அளித்திருக்கின்றாரே என்ற நினைப்பே துள்ளி குதிக்க வைத்து விடும். சந்தித்த பின் , இன்னும் உங்கள் கோரிக்கைகளை அவரிடம் ஒப்படைத்தவுடன் வெள்ளை மாளிகையையே அவர் உங்களுக்கு எழுதி கொடுத்தது போல் ஒரு பரவச நிலை வந்துவிடும். 

இது நம் வாழ்வில் கோடியில் ஒருவருக்கு நடக்கலாம். நடக்காமலும் போகலாம். ஆனால் உங்களையும், என்னையும், பாரக் ஒபாமாவையும் படைத்த இறைவன் தினமும் ஐந்து வேளை நம்மை நம் அனைவரையும் அவன் இல்லத்துக்கு அழைக்கின்றான். அழைப்பிலேயே….

‘இறைவன் பெரியவன்” என தன் இணையிலா ஒற்றை இருப்பை ஞாபக மூட்டுகின்றான்.

நம் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுபவனாக (இலாஹ்வாக) அவன் இருப்பதற்கு நாம் சாட்சியாளர்கள் என்பதை முன் வைத்து நம்மை அழைக்கின்றான்.

மேலும்,“தொழ வாருங்கள். ஜெயம் பெற வாருங்கள்” என வெற்றியை வாக்களித்து அழைக்கின்றான். 

இறைவன் வெற்றியை வாக்களித்த பின் அதற்கு மாறு செய்வானா? ஏன் நமக்கு அவன் வாக்குறுதியில் நம்பிக்கை இல்லை. அவன் அழைப்பை நாம் எப்படி எதிர் கொள்கின்றோம்.

நாம ‘இப்பத் தானே தொழுதோம் அதுக்குள்ளயா அடுத்த வக்த் (நேரம் – இங்கு தொழுகை நேரம்) வந்துடுச்சு காலம் பறகுதப்பா!.’  என சடைவுடன் கூறுகின்றோம். இதற்கு காரணம் என்ன?

1.    வாயால் அகில உலகத்தின் அதிபதி என்கின்றோம். ஆனால் மனதால் அமெரிக்க பிரஸிடண்ட்  அளவுக்கு கூட வேண்டாம் ஒரு பஞ்சாயத்து போர்ட் பிரஸிடண்ட் அளவுக்கு கூட அதிகாரம் உள்ளவனாக இறைவனை விளங்கவில்லை.

2.    “எங்கு திரும்பினாலும் என் முகம் இருக்கிறது” என இறைவனே சொன்னாலும் அர்ஷில் மட்டுமே அல்லாஹ் இருப்பதாக அவனை உலகை விட்டே 'ஒதுக்கி' வைத்து விட்டோம்.

3.    ஒவ்வொரு வினாடியும் இறைவனை முன்னோக்கிய அகப்பார்வையாளரான அண்ணல் நபியை விஷேச காட்சிக்காக தன் ஆட்சியின் தலை நகரான அர்ஷுக்கு அழத்தது போல் நம்மை விஷேச சந்திப்புக்காக அவன் பள்ளி வாசலுக்கு அழைக்கின்றான் என்பதை மறந்து பழக்க வழக்கத்தாலோ, பயத்தாலோ, தொழகையாளி என்ற கண்ணியம் தேடியோ பள்ளிக்கு சொல்கின்றோம் இறைவனின் சந்திப்பு நம் நோக்கமாவே இருப்பதில்லை.

4.    இறைவனை பிடரி நரம்பை விட சமீபமானவன், அருகிலிருந்து கேட்கக் கூடியவன் என இறைவேதம் கூறுவதை ஒப்புக் கொண்டாலும். நாம் கோரிக்கையை கேட்கும் போது இறைவனை அப்படி உணர்வதில்லை.

இஸ்லாமிய பாரம்பரியத்தில் வந்தவர்கள் தானே பின் ஏன் நாம் இப்படி இருக்கின்றோம்?

எனது குரு ஒரு கதை சொல்வார்கள். அதை எனது பாணியில் தந்துள்ளேன்:

ஒருவன் அறிமுகமில்லாத புதிய ஊரில் இருக்கும் போது  வயிறு வலிக்கவே சிகிச்சை பெற டாக்டரை தேடினான். ஓரிடத்தில் டாக்டர் நடேஷன் என போர்டு இருக்கவே “அப்பாடா!” என அவசரமாக உள்ளே நுழைந்தான். உள்ளே பார்த்தால் சலூன். குழப்பமாக இருக்கவே அங்கிருந்த சவர தொழிலாளியிடம் “ டாக்டர் நடேஷன்னு போர்டு போட்டிருக்கே அவர் காலி பண்ணிட்டு போய்ட்டாரா?” என கேட்க, அவர் உற்சாகமாக “நான் தான் டாக்டர் நடேஷன்” என்றார். 


 இப்ப வந்தவனுக்கு வயிற்று வலி போய் தலை சுற்ற 
ஆரம்பித்து விட்டது. உடனே நடேஷன் விளக்கினார், “ சார் மை பாதர் ஈஸ் எ டாக்டர். ஐயம் ஹிஸ் ஒன்லி சன். சன் ஆஃப் டாக்டர் ஈஸ் ஆல்சோ எ டாக்டர். டாக்டர் நடேஷன் , பிளஸ் டூ.”  என்றார். (நான் பாக்கியராஜ் ஸ்டைலில் சீரியசாக சொல்வதாக நடேஷனை கற்பனை செய்தேன். எனக்கு அசட்டு சிரிப்பு தான் வந்தது.)


இந்த கதையை கூறிவிட்டு. “உங்க வாப்பா (தந்தை) முஸ்லீம். அதனாலே நீங்களும் முஸ்லிம்னு சொல்லிக் கொள்வதும் இதைப் போலத் தான்.  இஸ்லாம் ஈஸ் நாட் சோ சீப் அஸ் யு திங்” என்பார்கள் என் குரு நாதர்.

மார்க்கத்தை அறிந்து கொள்ள நாம் என்ன செய்தோம் என சிந்திக்க வேண்டும்.

கண்ணியத்திற்குரிய ஜீஸஸ்(அலை), மோசஸ்(அலை), முஹம்மது(ஸல்)  என அனைத்து இறைதூதர்களிடமிருந்தும் சமுதாயத்தினர் நேர்வழிகாட்டலை நான்கு வகையில் பெற்றுக் கொண்டார்கள் (பார்க்க அல் குர்ஆன் 3:164) 

1.    வேதத்தை கற்றுக் கொண்டார்கள்.
2.    வேத விளக்கத்தை கற்றுக் கொண்டார்கள்
3.    ஞானத்தை கற்றுக் கொண்டார்கள்.
4.    அந்த அடிப்படையில் நபியின் சகவாசத்தில் மன பரிசுத்தத்தை அடைந்து கொண்டார்கள்.

இந்த நான்கு பகுதியையும் பெற வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

இஸ்லாம், ஈமான், இஹ்சான் என்ற இறை நம்பிக்கையாளர்களின் மூன்று படித்தரங்களை என் குரு நாதர் சுருக்கமாக இப்படி விளக்குவார்கள். 

·         ஒப்புக் கொள்வது இஸ்லாம்.
·         ஒப்பு கொண்டதை உறுதி கொளவது ஈமான்(நம்பிக்கை)
·         அதை உணர்வில் கொள்வது இஹ்சான் (witnessing).

இஹ்சான் (witnessing) எனும் நிலையை அடைந்தவர்கள் தான் “பார்க்கும் இடத்திலெல்லாம் உனைப் போல் பாவை தெரியுதடி!” என பாரதி பாடியது போல் தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் இறைவனை முன்னோக்குவதில் இன்பம் காணும் காதலர்கள்.

அந்த மெய்சாட்சியாளர்களாகத் தான் நம்மை "தொழ வாருங்கள் ஜெயம் பெற வாருங்கள் "என அழைக்கிறது பாங்கோசை.


No comments: