தோழமையுடன்

Friday, July 9, 2010

மை நேம் இஸ் கான் ஆனால் நான் ஒரு பயங்கரவாதியல்ல!


'உயிர்மை' இதழில் சாரு நிவேதிதா ‘மை நேம் ஈஸ் கான்’ என்ற திரைபடத்தின் விமர்சனத்திற்கு கொடுத்த தலைப்பு தான் இது. வித்தியாசமான தலைப்பினால் கவரப்பட்டு என்ன சொல்கிறார் சாரு நிவேதிதா என வாசிக்கையில் அவரது பின்வரும் வரிகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தன. சாருவின் வரிகள்….

இந்தப் படத்தில் எனக்குத் தெரிந்த ஒரு நெருடலான விஷயம், ரிஸ்வான் (கதாநாயகன்) தான் ஒரு சிறந்த குடிமகன் என்று நிரூபிப்பதற்காக கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஜார்ஜியா மாநிலத்துக்குச் சென்று பலவிதமான சாகச வேலைகளைச் செய்து அமெரிக்கர்களிடமும், அமெரிக்க ஜனாதிபதியிடமும், அவன் ஒரு முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அவனை விரட்டி விட்ட மந்திராவிடமும் ’நல்ல’ பெயர் வாங்குகிறான். மிகவும் குரூரமான கற்பனை. நான் ஒரு முஸ்லிமாக இருந்தால் பயங்கரவாதி என்றுதான் முத்திரை குத்தப்படுவேன். போலீஸால் தாக்கப்படுவேன். (முஸ்லிம் அல்லாத) மனைவியால் விரட்டி அடிக்கப்படுவேன். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து மீண்டு வந்து நான் ஒரு நல்ல குடி மகன் என்று நிரூபிப்பதற்காக ஒரு சூப்பர்மேனாக மாறி சூறாவளியில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப் பாற்றியே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தகைய கொடுமை! சக் தே இந்தியா (2007) படத்திலும் இதேதான் நடந்தது. ஹாக்கி ஆட்டக்காரராக வரும் கபீர் கானின் (ஷாருக்கான்) அணி முதலில் பாகிஸ்தானிடம் தோற்றுவிடும். உடனே அவருடைய இஸ்லாமிய அடையாளத்தின் காரணமாக, பாகிஸ்தானிடம் விட்டுக் கொடுத்துவிட்டார் என்ற அவப்பெயர் ஏற்படும். பிறகு அவர் ஹாக்கி பயிற்சியாளராக மாறி, தன் அணியை மகத்தான வெற்றி அணியாக மாற்றி தன்னுடைய தேசபக்தியை நிரூபிக்கிறார். இப்படியே இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமையும் எதிர்பார்த்தால் அதுவே ஒரு பயங்கரவாதம் ஆயிற்றே?

சாரு நிவேதிதாவின் இந்த விமர்சன வரிகளினால் என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. பூனையை ஒரு அறையில் அடைத்து அது வெளியேறும் வழிகளை அடைத்து விட்டால், செல்லப்பூனை கூட சீறும் புலியாகி மாறி நம்மை தாக்கும் அல்லவா? இதுபோல தீக்குளித்து தான் தன் ‘தேசபக்தி’ கற்பை நிருபிக்க வேண்டும் என்னும் இந்த இதிகாச கால மனோபாவம் சாமானியனின் மேல் திணிக்கப்பட்டால், தன்னால் இயலாத நிலையில் அதுவே அவனை வன்முறையின் பக்கம் செலுத்திவிடாதா? என்பது தான் அந்தக் கேள்வி.

நெறி ஏன் வெறியானது?

மதவேறுபாடின்றி நாம் ஒருவரையொருவர் மாமா, சித்தப்பா என உறவு கொண்டாடி நட்புடன் வாழ்ந்த காலங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞசமாய் பழங்கதையாகிவிட்டது. நம் நேசங்கள் பலவித வர்ணஜாலங்களால் நிறம் மாறி, நெறியாய் இருந்த மதவுணர்வு இன்று வெறியாய் மாறிவிட்டது.

ராமாயணத்தை, மகாபாரதத்தை என் தேசத்தின் இனிமையான இலக்கியமாக சொந்தம் கொண்டாடி பல்வேறு மனிதர்களால் பல்வேறு கோணங்களில் அவைகள் வெளிப்பட்ட போதெல்லாம் நான் ரசித்து மகிழ்ந்ததைப் போல என் அடுத்த தலைமுறையினர் ரசிப்பார்களா என்பது இன்று கோள்விக்குறியாகிவிட்டது. இன்று ராமர் ஒரு மதம் சார்ந்த அடையாளமாக அறிமுகப்படுத்தப்படுகின்றார். முஹம்மது நபியின் அன்பான சாந்தி வழியெல்லாம் குண்டு வைக்க தூண்டுவதாய் கதை கட்டப்படுகின்றது.

நித்தியானந்தாவின் தவறுகளுக்கு இந்து மத ஞான போதனைகள் காரணம் இல்லை என்பது எப்படி உண்மையோ அதைப்போலவே ஒரு சில இஸ்லாமியர்களின் தவறுகளுக்கு காரணம் இஸ்லாம் இல்லை என்பதை நாம் உணர்ந்தே இருக்கின்றோம். இருந்தாலும் இந்த தவறு செய்கின்ற மனிதர்கள் தங்களை கொள்கை சார்ந்தவர்களாய் முன்னிருத்துவதால் இஸ்லாத்தின் மீதிருக்கும் சந்தேகப்பார்வை முற்றிலும் மாறவில்லை. இவ்வாறு நாம் கொண்டிருந்த நேசமெல்லாம் ஒருவர் கொள்கையை இன்னொருவர் தவறாக புரிந்து கொள்ளும் சூழ்நிலையால் இனவெறி, மதவெறியாய் வளர்ந்து வருகின்றது.

பொதுவாக எல்லோருமே அமைதியை விரும்பினாலும். நாம் சன்னம் சன்னமாக அமைதி குலைவின்பால் போய் கொண்டிருக்கின்றோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கருத்து வேறுபாடுகளினால் பிளவுண்டு கிடக்கும் நம் மனங்களினிடையே இணக்கத்தை ஏற்படுத்த ஒரே வழி ஆன்மீகம் தான்.

ஏனென்றால் ஆன்மீகம் என்பது எல்லா மனிதருக்கும் பொதுவானது. எல்லா மதங்களிலும் உயிரானது. அல்லாஹ், பிரமம், கர்த்தர் என ஆயிரம் பெயரிட்டு அழைத்தாலும் பெயர்களை எல்லாம் தாண்டிய அந்த ஏகப் பரம் பொருளிடமிருந்து, ஒற்றை ஒரே மூலத்திலிருந்து உலகத்தார் அடைந்து கொண்டது. அந்த துய ஆன்மீகத்தை அறிய வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகிவிட்டது.

ஆன்மீகத்தால் மட்டுமே பரஸ்பர அவநம்பிக்கைகள் வன்முறை மனோபாவங்கள் நம்மை விட்டு நீங்க வாய்பிருக்கிறது. ஆகவே, ஆன்மீகத்தின் மூலம் அனைத்து வெறிகளுக்கும் மாற்றாக மனித நேய வெறியை மனதில் வளர்க்கும் ஆசையுடன் வைக்கப்பட்ட சின்னச் செடியாய் ‘'காதல் சொன்ன வேதம்' என்ற தலைப்பில் எனக்கு ஓரளவு அறிமுகமான இஸ்லாமிய ஆன்மீக கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

அது என்ன ஆன்மீகம் என ஆரம்பித்துவிட்டு காதல், வேதம் என்ற தலைப்பு என கேள்வி எழுகின்றதா? உங்களுக்கு என் சுருக்கமான பதில். ஞானம் வந்ததற்கான அடையாளம் எல்லோரிடமும் அன்பான கண்கொண்டு நோக்குதல் என்பார்கள். அன்பான கண் கொண்டு நோக்குதல் என்பது தான் நேசித்தல் அல்லது காதலித்தல் என்பது. இதன் வெளிப்பாடு எல்லோரையும் கட்டிப்பிடித்து முத்தமிடும் சமாச்சாரங்களல்ல. எல்லோரையும் மதித்தல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் இன்னும் எல்லோருடனும் பண்புடன், நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்ளுதல் என்பதாகும். நற்குணங்களை சம்பூர்ணமாக்கவே இறைவன் என்னை நபியாக்கி இருக்கின்றான் என முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

முஹம்மது நபிகளாரின் வாழ்க்கை எப்படி இருந்தது என அவர்களின் துணைவியார் ஆய்ஷா(ரலி) அம்மையாரிடம் கேட்ட போது. அது குர்ஆனாக இருந்தது என பதிலளித்தார்களாம். குர்ஆன் முழுவதுமே அல்லாஹ் என்ற பெயரில் அழக்கப்படும் அந்த ஏகப்பரம்பொருளுடன் நமக்குள்ள காதலான நேசம் தான் நிரம்பி வழிகின்றது.

இங்கு ஒரு சிறு விளக்கம். அல்லாஹ் என்றால் இறைவன், கடவுள் என்று பொருள். அல்லாஹ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெயர் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதே இதற்குச் சான்றாகும். ஆதி நாள் முதலே அரபு மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் இறைவனை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக அல்லாஹ் என்றால் முஸ்லிம் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கடவுள் என நினைப்பது தவறான கருத்தாகும்.

குர்ஆனிய உபதேசங்களின் வாயிலாக அந்த இறைநேசத்தை, இறைநெருக்கத்தை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எடுத்து சொன்ன போது அதை கேட்டு மகிழ்ந்த இதயங்கள் அன்பால் அவர்கள் வசமானது. இல்லை ! இல்லை!இறைவனே அந்த மனிதர்களை தன் நேசரான முஹம்மதரின் நேசர்களாக்கினான். அவர்களது நேசம் வரலாறு காணாத நேசம். நம்மால் விளங்கிக் கொள்ள முடியாத நேசம். முதல் வாரத்தில் தலைவா! என கொண்டாடி கட்டவுட்டுக்கு பாலாபிஷேசகம் செய்வதும். மறு வாரமே மன்றத்தில் பதவி தராததால் அதே தலைவனின் உருவத்தை கொடும்பாவி கொளுத்தும் போலியான நேசமல்ல!. அவர்கள் இறைவனின் மீதுள்ள நேசத்தால் அவன் நேசரை(முஹம்மது நபியை) நெசித்தார்கள்.

என் தாயும், தந்தையும் உங்களுக்கு அர்பணமாகட்டும் யாரசூலல்லா! (இறைவனின் தூதரே!) என தன் தாயும், தந்தையும் தராத ஞான அமுதினை தந்த முஹம்மதரின் அன்பு வழியில் தங்களை அர்பணித்துக் கொண்டார்கள் நபித்தோழர்கள்.

ஒரு கருப்பு அடிமை தான் உங்கள் தலைவர் என்றாலும் செல்வ சீமான்களாய் இருந்தவர்களும் கட்டுப்பட்டார்கள்.

ஒரு சின்ன விஷயத்துக்காக நூறண்டுகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட கூட்டம் அன்பு வழியில் மாறியது. தங்கள் தன்னலத்தை விட பிறர் நலத்தை முற்படுத்தினார்கள். யர்முக் என்னும் போர்க்களத்தில் நடந்த ஒரு சம்பவத்தை படியுங்கள். போர்களத்தில் குத்துயிராய் கிடந்து மரண தாகத்தில் ஒரு நபித்தோழர் "தண்ணீர்" என முனங்குகின்றார். அப்போது அவரை தேடி வந்த அவரது உறவினர் அவரை கண்டு நீர் புகட்ட விரைகிறார். அவர் நீர் பருக எத்தனித்த போது பக்கத்தில் கிடந்த இன்னொருவர் அதே நிலையில் "ஆஹ்" என முனங்க, முதலாமவர் இருந்த தண்ணீரை பக்கத்தில் இருந்தவருக்கு கொடுக்க சொல்லி சைகை செய்கின்றார். தண்ணீர் வைத்திருப்பவர் அந்த தோழரை நெருங்கியபோது அங்கே இன்னொரு மூலையிலிருந்து "ஆஹ்" என ஒரு குரல். இரண்டாம் மனிதர் அந்த மூன்றாம் மனிதருக்கு தண்ணீரை கொடுக்க சைகைசெய்கிறார். தண்ணீரை மூன்றாம் மனிதருக்கு கொடுக்க அவர் விரைந்த போது அவர் உயிர் பிரிந்திருந்தது. திரும்பி பார்கின்றார். மற்ற இரண்டு பேர்களின் உயிர்களும் பிரிந்து விட்டது. மரண தாகத்தின் போதும் கூட மற்றவர்களை முற்படுத்திய அந்த மகத்தான அன்பு அவர்கள் அடைந்த இறைஞானத்தின் விளைவு.

இன்னும் ஒரு சம்பவம் .ஒரு நபித்தோழர் மிகவும் வறுமை நிலையில் இருந்தார். அவருக்கு அன்றிரவு உணவளிக்கும் பொறுப்பை இன்னொரு நபித்தோழர் ஏற்றுக் கொண்டார். பிரச்சனை என்னவென்றால் உணவு பொறுப்பை ஏற்றுக் கொண்ட நபித்தோழர் வீட்டிலும் உணவு இல்லை. அவர்களது குழந்தைக்காக மட்டுமே சிறிது உணவு இருந்தது. மனைவியிடம் சொல்லி பிள்ளயை துங்கச் செய்துவிட்டார். விருந்தினர் வந்து உணவு உண்ண அமர்ந்தவுடன். இருந்த உணவை அவருக்கு வைத்தார்கள். உடனே அந்த நபித்தோழரின் முன்யோசனையின் படி அவரின் மனைவி விளக்கை ஒழுங்கு செய்வது போல் பாவனை செய்து விளக்கை அணைத்து விட்டார். விருந்தாளியின் பக்கத்தில் வெறும் தட்டுடன் அமர்ந்து கொண்டு தானும் உணவு உண்பது போல் பாவனை செய்தார். விருந்தாளி அமைதியாக உணவருந்தி சென்றார். இந்த சம்பவம் இறைவனால் பாராட்டபட்டது குறித்து திரு குரானில் ஓர் வசனம் குறிப்பிடுகின்றது.

இப்படி எத்தனையோ சம்பவங்கள் வரலாற்றில் மறவா நிகழ்வுகளாக பதியப்பட்டுள்ளது. இவை எல்லாம் இறைஞானத்தின் விளவுகள். இந்த இறைஞானத்தை பற்றி கேட்ட போது ஒரு ஆன்மீக அறிஞர் சொன்னர்கள்,"முன்பு அது வாழும் உணமையாக இருந்தது ஆனால் பெயரிடப்படவில்லை. இன்று பெயர் மட்டும் தான் இருக்கிறது அந்த உண்மை நெறி) இல்லை" என்று. அவ்வளவு காணபதற்கரிதாகி விட்டது மார்க்கத்தின் உயிர் போன்ற ஒரு ஞானம்.

நபிமார்களும், நபித்தோழர்களும், நல்லடியார்களும் அள்ளிப் பருகிய அந்த இஸ்லாமிய ஆன்மீக ஞானத்தில் சில துளிகளையாவது சுவைக்கும் பாக்கியம் நமக்கும் வேண்டாமா? அந்த காதல் பாதையை இறைவன் உதவியுடன்  எளிமையாக எடுத்துச் சொல்ல ஆசிக்கின்றேன். நீங்கள் அதை விருஷமாய் வளர்க்களாம். வேரிலேயே கிள்ளி எறியலாம். இல்லை உங்கள் ஏளன கழுகுகளுக்கும், பரிகாச காக்கைகளுக்கும் இறையாக்கலாம். எது செய்தாலும் சரி ஒரு முறை நடுநிலையான கண்ணோட்டத்தோடு படித்து விட்டு செய்யுங்கள். நான் எதை சத்தியமான உண்மை என நம்புகின்றேனோ அதை தான் என் அன்பு சகோதர/ சகோதரிகளான உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக பகிர்ந்து கொள்ள நாடுகின்றேன்.

இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) விரைவில் தொடர்கிறேன்.10 comments:

ibza said...

பதிவுலகில் பெறுகிவரும் மதவெறி, தனி மனித தாக்குதல்களுக்கு மத்தியில், மதங்களைப் பற்றிய மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல பதிவு. தொடருங்கள் விரைவில்.. நாங்களும் இணைந்திருப்போம் உங்களின் இப்பயணத்தில்.. இன்ஷா அல்லாஹ்..

Karthick Chidambaram said...

//தவறு செய்கின்ற மனிதர்கள் தங்களை கொள்கை சார்ந்தவர்களாய் முன்னிருத்துவதால் இஸ்லாத்தின் மீதிருக்கும் சந்தேகப்பார்வை முற்றிலும் மாறவில்லை. இவ்வாறு நாம் கொண்டிருந்த நேசமெல்லாம் ஒருவர் கொள்கையை இன்னொருவர் தவறாக புரிந்து கொள்ளும் சூழ்நிலையால் இனவெறி, மதவெறியாய் வளர்ந்து வருகின்றது.//

மிக அழகான புரிதல்.
மதங்களின் மீது முழுமையான நம்பிக்கை இன்னும் என்னிடம் இல்லை.
ஆனால் உங்கள் புரிதல் சரியானதே என்பதில் உடன்படுகிறேன்.

அனானி முன்னா said...

//ஒருவர் கொள்கையை இன்னொருவர் தவறாக புரிந்து கொள்ளும் சூழ்நிலையால் இனவெறி, மதவெறியாய் வளர்ந்து வருகின்றது.//

கரெக்ட் தான். உங்களுக்கும் சேர்த்து.
அனானி முன்னா.

அனானி முன்னா said...

//ராமர் ஒரு மதம் சார்ந்த அடையாளமாக அறிமுகப்படுத்தப்படுகின்றார்//
சரி. அப்போ அல்லாவும் அப்படித்தானே அறிமுகப்படுத்தப்படுகின்றார்?

அனானி முன்னா.

அனானி முன்னா said...

பேசுவது, செய்வது, யோசிப்பது எல்லாமே முஸ்லிம் என்று இருந்து விட்டு, அடுத்தவர்களை மதவெறியன் என்று சொல்வதை எப்போது நிறுத்த போகிறீர்கள்?

அனானி முன்னா.

அனானி முன்னா said...

முஸ்லிம்கள் செய்த பெரிய தவறு என்னவென்றால், தீவிரவாதத்தை தீவிரமாக எதிர்க்காததுதான். நீங்கள் தீவிரவாதத்தை தீவிரமாக எதிர்த்திருந்தால், இன்று உங்கள் நாட்டுப்பற்றை யாருக்கும் நிரூபிக்க தேவை இல்லாமல் இருந்திருக்கும். இது யார் தவறு?

அனானி முன்னா.

புல்லாங்குழல் said...

தங்கள் இடுகைகளுக்கு நன்றி நண்பரே!. உங்கள் கேள்விகளுக்கு என் எளிய விளக்கம்.

1.எல்லோராலும் ரசிக்கப்பட்ட காவிய ராமனைப் பற்றி உங்களுக்கு தெரியாதா முன்னா!

2.அல்லாஹ் என்பது முஸ்லிம் மதத்தவரின் கடவுள் என்பது தவறான கருத்து என் வலைப்பக்கத்தின் தலைப்பிலேயே பதிந்திருக்கின்றேன் முன்னா!

3.முஸ்லிம் முஸ்லிமாக, இந்து இந்துவாக யோசிப்பதில், நடப்பதில் என்ன தவறு முன்னா! இன்னும் சொன்னால் தன் இனத்தின் மீது மதத்தின் மீது பற்று இருப்பது தவறல்ல. தன்னை சார்ந்தவனின் தவறுகளுக்கு துணை போவது தான் தவறு.

4. எல்லாவித தீவிரவாதத்திற்கும் எதிராக நாம் எல்லோரும் ஒன்றிணைவோம் வாருங்கள். ஆன்மீகமும், அன்பும் மலர்ந்து நமது தேசம் செழிப்பாகட்டும்.

அன்புடன் அமீன்

அன்புடன் மலிக்கா said...

மிக தெளிவாக அழகிய முறையில் எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள் அமீன்.

மனிதன் மனிதனாக வாழ அவன் மனசாட்சிக்கு பயப்படவேண்டும்.
மனசாட்சிக்கு பயப்படவேண்டுமென்றால்
மனிதனுக்கு அவனைப்படைத்த இறைவன்மேல் நம்பிக்கை வேண்டும்.
அது எங்கே இல்லையோ அங்க மனிதன் மனிதத்தை இழக்கிறான்.

புரிதலில்லா அறிதல் எதற்கும் உதவாது..

தொடர்ந்து எழுதுங்கள்..

Anonymous said...

இறைவா
என் 'இபாதத்' இலைகள்
சருகாகி வீழ்ந்தாலும்
கிடப்பதென்னவோ உன்
ஏகத்துவ விருட்சத்தின்
காலடியில்தான்

இறைவா
உன்னோடு
அரபு மொழியில் பேசுவதைவிட
அழுகை மொழியில்
பேசும்போதுதான்
உன் அண்மை தெரிகிறது

இறைவா
தொழும்போதுகூட நான்
தூரமாகிறேன்
உன்னை
நினைக்கும்போதெல்லாம்
நெருக்கமாகிறேன்

இறைவா
வானம் வரைகூட
என் எண்ணங்கள்
வியாபிக்க முடிகிறது
இந்த
வார்த்தைத் தடைகள்
என்னை
தரையிலேயே நிறுத்திவிடுகின்றனவே!

இறைவா
உன் அருள் பெட்டகத்துக்கு
பூட்டுக்களே இல்லையெனும்போது
இவர்கள் மட்டும் ஏன்
வெறும் வார்த்தைச் சாவிகளை
பிரார்த்தனை வளையங்களில்
கோர்த்துக்கொண்டு அலைகிறார்கள்?

இறைவா
உண்டுவிட்டு உனக்கு
நன்றி சொல்வதைவிட
பசித்திருந்தும்
உன்னளவில்
பொறுமை கொள்ளும்போதுதான்
என் ஆன்மா
ஆனந்தமடைகிறது

இறைவா
உன்
மகத்துவமிக்க மன்னிப்பால்
மறுபடி மறுபடி
எங்களை
மனிதனாக்குகிறாய்
நாங்களோ
எங்கள் செயல்களால்
மறுபடி மறுபடி
ஷைத்தானாகிறோம்
மறுபடியும் எங்களை
மன்னித்துவிடு நாயனே

இறைவா
தொழுகையில்
உன்னைத் தொலைத்தோம்
வாழ்க்கையில்
எம்மைத் தொலைத்தோம்
'கலிமா'வையும் நாங்கள்
களவு கொடுக்குமுன்
கரையேற்றிவிடு நாயனே

இறைவா
நீ அனுப்பிய
வேத வார்த்தைகளை
உன் தூதர்
வாழ்க்கையாக்கினார்
இவர்களோ
அவைகளை
மறுபடியும்
வார்த்தைகளாக்கிவிட்டார்கள்

இறைவா
நீ
சேதாரமில்லாமல்
பாதுகாக்கும்
திருக்குர்ஆனை
இவர்கள்
ஆதாரத்துக்கு மட்டுமே
அணுகுகிறார்கள்

இறைவா
நீ
உன் தூதரின்
மனதில் இறக்கி வைத்த
திருவசனங்களை
இவர்கள்
மூளைக்குக் கடத்திவிட்டார்கள்
அதனால்
நம்பிக்கை விழுந்தது
சந்தேகம் எழுந்தது

இறைவா
நீ
எழுத்தில் அனுப்பாத
திருமறையை
இவர்கள்
எண்களுக்குள்
சிறைவைத்து விட்டார்கள்

இறைவா
நீ
தர்க்கத்தை
தவிர்க்கச் சொன்னாய்
ஒற்றுமையை
வளர்க்கச் சொன்னாய்
இவர்கள்
தர்க்கித்தே
பிரிந்து போகிறார்கள்

இறைவா
நீ
மறுமை நாளின்
நீதிபதி என்றாய்
இவர்கள்
நீ மறுமைக்கு மட்டுமே
என நினைத்து
இம்மையின் நீதிபதிகளாக
தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
கரியை வைரமாக்கும்
காரியக்காரனே!
இங்கே
உன் வஹியைச் சுமந்த
வைரங்களெல்லாம்
பணத்தீயில்
கரியாகிக் கொண்டிருக்கின்றனவே
கொஞ்சம் கவனிப்பாயா?

இறைவா
இந்த
'தவ்ஹீது'க் குயில்களெல்லாம்
ஏகத்துவ கானத்தை
எங்கே தொலைத்தன?

இறைவா
'ஒதுவீராக'
எனப்பணித்தாய்
இவர்கள்
ஒலிப்பேழைகளாக்கி
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
அடிக்கடி
சிந்திக்கச் சொன்னாய்
இவர்கள்
குழு அமைத்து
நிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
இவர்களுக்கு
அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய
ஏதாவது செய்யேன்

z.ஜபருல்லா

புல்லாங்குழல் said...

ஏன் இவ்வளவு அருமையான கவிதையை (கருத்துகளை) பெயர் அறிவிக்காமல் பதிந்திருக்கின்றீர்கள்.