தோழமையுடன்

Tuesday, October 11, 2011

சைத்தானிய வாதம்


கடந்த வியாழனன்று எனது ஷெய்கு அவர்களின் பிரதான கலிஃபாவான சுபூரிஷாஹ் ஃபைஜி அவர்கள் துபாயில் உரையாற்றினார்கள். அவர்கள் தன் உரையின் போது “பாமர மக்கள் மட்டுமின்றி அறிஞர் பெருமக்கள் கூட 'என் விதிய ஏன் இப்படி எழுதினே இறைவா?' என கேட்கின்றார்கள். 


இந்த கேள்வியை சிலர் நாவாலும், பலர் மனதாலும் கேட்கும் நிலையை காண்கின்றோம். ஆனால் இறைஞான பாடங்களின் வாயிலாக நமக்கு அத்தகைய கேள்விகள் வராமல் நமக்கு கிருபை செய்தானே அந்த அல்லாஹுவுக்கே புகழனைத்தும்!” என கூறி சில நுட்பமான ஞானபாடங்களை விளக்கினார்கள். அவைகள் ஞானபாடங்கள் பயின்றவர்களுக்கு இடையே மட்டுமே பகிர்ந்து கொள்ளதக்கவை. அதனால் பதிய முடியவில்லை. அவர்களது உரையின் வாயிலாக என்னில் ஏற்பட்ட சில சிந்தனைகள் இறையருளால் உங்களுக்கும் சில தெளிவை வழங்களாம் என்ற எண்ணத்தில் இங்கே பதிந்துள்ளேன்.

சைத்தானின் வாதம்

ஆதம் (அலை) சஜ்தா செய்ய  இறைவன் ஆணையிட்ட போது மறுத்துவிட்டு “ ரப்பி! நீ என்னை வழி தவற விட்டாய்”(15:39) என இறைவனிடம் வாதம் புரிந்தான் சைத்தான். என்னை இப்படி மாறுசெய்யுமாறு நீதானே படைத்தாய் என இறைவன் மேல் குற்றம் சாட்டும் அவன் கேள்வியைத் தான் இன்று எத்தனையோ உள்ளங்களில் அவன் எதிரொலிக்க செய்து வருகின்றான். அந்த சைத்தானிய குழப்பங்களிலிருந்து மீள சில அடிப்படையான விசயங்களை தெரிந்து தெளிவது நமக்கு அவசியம். அவைகளை சுருக்கமாக பார்ப்போம்.

விதியின் மூல ஊற்று படைக்கப்பட்டதல்ல
இறையறிவில் இருப்பதற்கு தோதுவாகவே விதி நிர்ணயிக்கப்பட்டது. விதியின் மூல ஊற்று இறையறிவு.

வரையப்படும் முன்பே ஒவியனின் அறிவில் ஓவியமும், எழுதப்படும் முன்பே எழுத்தாளனின் அறிவில் எழுத்துகளும் இருப்பதைப் போல படைப்பினங்கள் அனைத்தும் படைக்கப்படுவதற்கு முன்பே இறைவனால் அறியப்பட்டவைகளாக இறையறிவில் இருந்தது. இருக்கிறது.

அடுத்து விளங்க வேண்டியது. மனித அறிவைப் போன்றதல்ல இறையறிவு? ஓவியன், எழுத்தாளனின் அறிவு என்பது  கல்வி, அனுபவம், பயிற்சி, ஞாபகம், உள்ளுணர்வு சார்ந்து வளர்ச்சி பெறக்கூடியது. இறையறிவு என்பது ஆரம்ப முதலே இருப்பது. நிகழ்வின் அடிப்படையில் காலவாரியாக பிரிக்கப்படும் நடந்தது, நடக்கக் கூடியது. நடக்கப் போவது என்ற முக்கால நிகழ்வுகளும் ஆரம்ப முதலே தன்னுள் அடக்கிய பரிபூரண ஞானமது.

யார் படைக்கப்படாதவனோ அவனைத் தான் நாம் இறைவன் என்கின்றோம். இறைவன் எப்படி படைக்கப்படாதவனோ அப்படியே அவனது பண்பாகிய அறிவும் படைக்கப்படாதது. அறிவு என்பது அறியப்பட்டவைகளை உள்ளடக்கியது. அறிய பட்டவைகள் இல்லாமல் அறிவு என்பது இல்லை. ஆக அறிவும் அதன் உள்ளடக்கமாகிய அறியப்பட்டவைகளும் படைக்கப்பட்டவையல்ல.

நீங்களும், நானும் இன்னும் இந்த பிரபஞ்சத்திலும், நம் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட உலகத்திலும் (மலக்கூத்தில்) நிகழும் அனைத்து நிகழ்வுகளும்  ஆதி முதலே இறைவனால் அறியப்பட்டவை. இறையறிவில் நாம் எப்படி எப்படி இருந்தோமோ அவைகள் நம் சொந்த நிலைகள். இறைவனால் படைக்கப்பட்டவையல்ல.

இறைவன் தன் அறிவில் நம்மைப் பற்றி அறிந்திருந்த விதத்தில் தான் நம்மையும் நமது செயல்களையும் படைக்கின்றான். இதைத் தான் “இறைவன் உங்களையும் உங்கள் செயல்களையும் படைக்கிறான்” என்று வேதம் குறிக்கிறது.

ஆக சைத்தான் இறையாணையை நிராகரித்த செயல் அவனது அமைப்பின்படி அவன் செய்த செயல்.  அனைத்தும் அவற்றின் அமைப்பின்படியே செயல்படுகின்றது என்கிறது வேத வரிகள். 
இறைவனது அறிவில் சைத்தான் படைக்கப் படும்  முன்பே நிராகரிப்பவனாகத் தான் இருந்தான். ஆதம் நபிக்கு பணிய சொன்ன கட்டளை வந்தபோது அதற்கு மறுத்த அவன் செயலின் மூலம் அவனுடைய அந்த நிராகரிப்பு பகிரங்கமாக வெளியானது. 

ஒவ்வொருவரும் அவரவர்களின் சுய அமைப்பின் படியே செயல்படுவார்கள்.(17:84) மேலும் எவற்றை நீங்கள் கேட்டீர்களோ அவற்றையெல்லாம் உங்களுக்கு கொடுத்தான் (14:34) என்கிறது இறைவேதம். அவரவர் அமைப்பின் படி அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட செயலை தன் ‘ஹவ்ல குவ்வத்து’ கொண்டு வெளியாக்குவது இறைவனின் வழக்கம்(சுன்னத்து).

உதாரணமாக பார்த்தால் மின் சக்தி மின் விசிறியை சுழல வைக்கின்றது. ஃபிரிட்ஜை குளிர வைக்கின்றது. மின் அடுப்பை எரிய வைக்கின்றது. விளக்கை வெளிச்சம் தர வைக்கின்றது. அந்தந்த அமைப்பின் செயலையே வெளியாக்குகின்றது.ஒருவனுடையஅமைப்பின் படியான  செயல்களை இறை சக்தி இவ்விதமாக வெளிப்படுத்தினாலும் அதை கேட்டு பெறுவதில் அவன் ஆதி அமைப்பின் தொடர்பு மட்டுமின்றி  மனோ இச்சைகள்  பெரும் பங்கு வகிப்பதற்கு அவரவர் மனமே சாட்சி. 

இதற்கு மாற்றமாக தன் செயல்பாட்டில் தனக்கு சம்பந்தமே இல்லை என வாதிட்டான் சைத்தான். ஆனால் அப்படி ஆதமுக்கு சஜ்தா செய்யும் எண்ணம் கூட அவனுகில்லை என்பதை “அவரை(ஆதமை) விட நான் உயர்ந்தவன்” என்னும் அவனது கூற்றே வெளிப்படுத்துகிறது. தடுக்கப்பட்ட மரத்தின் பால் நெருங்கிய ஆதி பிதா ஆதம் நபி இறை உத்தரவுக்கு மாற்றமான தன் சறுகுதலை - அந்த செயலை படைத்தவன் நினைத்தால் தடுத்திருக்கலாமே என வாதிடவில்லை. அந்த செயல் பாட்டில் உள்ள தன் பங்கை உணர்ந்தவர்களாக   “எங்களுடைய ரப்பே!  நாங்கள் எங்கள் நப்சுக்கு அநீதம் இழைத்துக் கொண்டோம்” (7:25) என்று சொல்லி மன்னிப்பு கேட்டார்கள்.  

தவறுகள் நிகழ்ந்தால் நம் சுய அமைப்பை (நப்ஸை) நினைத்து வருந்தி இறை மன்னிப்பை வேண்ட வேண்டும். அது தான் ஆதி பிதா ஆதம் நபி காட்டித் தந்த வழி.

நல்லவரும் கெட்டவரும்

ஒருவர் நல்லவராக இருக்கின்றார். எனது அமைப்பின்படி நான் நல்லவனாக இருக்கின்றேன் என பெறுமை பட முடியுமா? முடியாது ஏனென்றால் இந்த வினாடி நல்லவனாக உள்ள நாம் அடுத்த விநாடி எந்த நிலையில் இருப்போமா என நமக்கு தெரியாது. அதனால் நாம் நற்செயல்களில் நிலைத்திருக்க இறைகருணையை (ஃபழ்லை) முன்னோகிக்கியவர்களாகவே பணிவுடனே நம் வாழ்க்கை நகர வேண்டும்.

ஒருவர் மிக மோசமான நடத்தையில் இருக்கிறார். முடிந்தால்  அவருக்காக இறைவனை வேண்டலாம். அவரை நாம் கேவலமாக பார்க்கக் கூடாது. ஆரம்பத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை கொல்ல வாளேந்தி வந்தவர்கள் உமர் அவர்கள் பின்னாளில் அகிலம் போற்றும் நபி தோழர் உமர்(ரலி) ஆனார்கள். வட்டி வாங்குபவராக, கொள்ளைக்கூட்ட தலைவராக, குடிகாரராக இருந்தவர்கள் பின்னாளில் இறைநேசர்களாய் மணம் பரப்பிய சரித்திரங்களும் நம் முன்னே இருக்கிறது. இதனால் நாம் பெறும் படிப்பினை என்ன?

இறைகருணை இல்லை என்றால் எந்த நன்மையும் செய்ய முடியாது. எந்த கேவலமான நிலையை விட்டும் தப்ப முடியாது என்பது தான். அதனால் என் விதியில் இருக்கும் என் தீமைகளை விட்டும் என்னை காத்தருள்வாய் இறைவா என வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் இறை கருணையை வேண்டியவராய் வாழ வேண்டும்.

இறைவன் நம்மை நல்லோர்கள் கூட்டத்தில் ஆக்கி வைப்பானாக! ஆமீன்.  
No comments: