தோழமையுடன்

Friday, August 3, 2012

குர்ஆன் கூறும் ஏகத்துவ மெய்ஞானம் ஓர் எளிய விளக்கம் – 4


இருப்பு:

தேவையை நிறைவேற்றும் 'இலாஹ்' சுயமாக இருக்க வேண்டும். யாருக்கு சுய உள்ளமை இல்லையோ அவரிடம் பொருளாதாரம், சக்தி, பண்புகள் சுயமாக இருக்கவே முடியாது. உள்ளமையின் அடிப்படையில் அல்லாஹ் தான் சுய இருப்பை உடையவன். மற்றும் அவனல்லாத அனைத்தின் இருப்பையும் இடைவிடாமல் தரிப்படுத்திக் கொண்டிருப்பவன் என சிருஷ்டிகளுடனான தொடர்பை விளக்குகிறது

அல்லாஹ்வைத் தவிர இலாஹ் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன் (நிலைநிறுத்துபவன்) (2:255)” என்ற வேத வசனம்.


அல்லாஹ் தான்கய்யூம்ஆக இருக்கின்றான். அதாவது தன் தானே நிலைத்திருப்பதுடன் தானல்லாததையும் நிலைநிறுத்துபனாக இருக்கின்றான்
சிருஷ்டிகளையும் அதன் செயல்களையும் படைப்பவன் இறைவன் என்கிறது இறைவேதம். படைக்குதல் என்றால் சிருஷ்டிகளுக்கு  அதன் இருப்பையும் செயல்களையும் வழங்குவதை குறிக்கிறது. படைப்பு என்பது ஒரு தொடர் நிகழ்வு. சிருஷ்டிகளின் இருப்பும், செயல்பாடும் இடைவிடாமல் நிலை மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆகவே சிருஷ்டிகளின் ஒவ்வொரு இருப்பையும் அவைகளுக்கு வழங்கி கொண்டிருக்கும் 'கய்யும்' உறக்கத்திற்கும், ஓய்வுக்கும் அப்பாற்பட்டவன்.

  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இஸ்ரவேலர்கள் மூசா (அலை) அவர்களிடம், “மூசாவே! உம்முடைய இறைவன் உறங்குவானா?” எனக் கேட்டனர். அப்போது மூசா (அலை) அவர்கள், “அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்!” எனக் கூறினார்கள்

   உடனே இறைவன் மூஸா (அலை) அவர்களை அழைத்து, “மூசாவே! அவர்கள் உம்மிடம் உம்முடைய இறைவன் உறங்குவானா எனக் கேட்கின்றனர். நீர் இரண்டு கண்ணாடிக் குடுவைகளை உம்முடைய கைகளில் பிடித்துக் கொண்டு இரவில் விழித்து நிற்பீராக!” எனக் கூறினான்

   அவ்வாறே மூசா (அலை) அவர்களும் செய்யத் தொடங்கினார்கள்.  இரவின் மூன்றிலொரு பகுதி சென்றதும் சிறு உறக்கம் ஏற்படவே, முழங்கால்கள் கீழே பட்டு விழுந்தார்கள். பின்னர் விழிப்படைந்து தம் கால்களை உறுதிப்படுத்தி நின்றார்கள்

    இரவின் இறுதிப் பகுதி வந்தபோது (மீண்டும்) சிறு உறக்கம் ஏற்படவே (அவர்களின் கைகளிலிருந்த) இரண்டு கண்ணாடிக் குடுவைகளும் கீழே விழுந்து உடைந்தன.

   அப்போது அல்லாஹ் மூசா (அலை) அவர்களிடம், “மூசாவே! நான் உறங்கிவிட்டால் உம் கைகளிலிருந்த இரண்டு கண்ணாடிக் குடுவைகளும் கீழே விழுந்து நாசமானதைப் போன்றே வானங்களும் பூமியும் விழுந்து அழிந்துவிடும்!” எனக் கூறினான். அதையேஆயத்துல் குர்சீஉணர்த்துகிறது. (அறிவிப்பாளர்: சயீத் பின் ஜுபைர் (ரஹ்); நூல்: தஃப்சீர் இப்னு அபீஹாத்திம் என இப்னு கஸிரில் குறிப்பிடபட்டுள்ளது).  

சிருஷ்டிகளை நிலைநிறுத்தும் தன்மை (கைய்யூமிய்யத்) சற்று ஆழமாக விளங்க வேண்டிய விஷயம். அதற்கு முன் ஒரு சிறு விளக்கம்.

பண்புகளை அதை உடையவனை விட்டும் பிரிக்க முடியாது. (இன்பிகாகே பைன ஜாத் வ ஸிபாத் முஹால் என்பார்கள்) அதாவது அறிஞன் என்பவனை விட்டு அவன் அறிவை பிரிக்க முடியாது. பண்பு எங்கேயோ பண்பை உடையவனும் அங்கே இருப்பான்.

"என்ன அந்த அறையில் அப்பாவின் பேச்சு குரல்  கேட்கிறதே" என ஒருவர் சொன்னால் அதற்கு பேசக்கூடிய அப்பா அங்கே இருக்கிறார் என பொருள்.

சிருஷ்டிகளில் அல்லாஹ்வின் 'கைய்யுமிய்யத்' - நிலைநிறுத்தல் வெளியாகிறது என்றால், கைய்யும் (நிலை நிறுத்துபவன்) அனைத்து சிருஷ்டிகளுடன் உடனிருக்கின்றான் என்பதும் உணர வேண்டிய மிக முக்கியமான அம்சம். அப்படி இல்லை என்றால் சிருஷ்டிகள் தன் தானே நிலைத்திருப்பதாக ஆகி விடும். இப்படி சிருஷ்டிகளுடன் அல்லாஹ்வின் உடன் இருக்குதலை (மஈய்யத்தே தாத்தியை) விளக்காதிருப்பது தான் இணை வைப்பின் வாயிலை திறக்கிறது. ஆகவே அல்லாஹ் நம்முடன் இருக்கும் நெருக்கம் (குர்பு), மிக நெருக்கம் (அக்ரபு) என்பவை தெளிவாக விளங்கப்பட வேண்டும்.

இறைவனின் உடன் இருக்குதலை பற்றி ஆரிபீன்கள் மெய்ஞான விளக்கம் மூலம் தான் தெளிவான விளக்கம் பெற முடியும் ஆயினும் விளக்கத்திற்காக விஞ்ஞான கண்ணோட்டத்தில் சுருக்கமாக பார்ப்போம்.

விஞ்ஞானி மெய்ஞானியாகலாம். மெய்ஞானி விஞ்ஞானியாகலாம். அஞ்ஞானி விஞ்ஞானியாகவும் முடியாது. மெய்ஞானியாகவும் முடியாது.

இறைவன் நம்மை அஞ்ஞான இருளை விட்டும் காப்பானாக! அமீன்.

 சரி விஞ்ஞான விளக்கத்திற்கு வருவோம்.

ஒவ்வொரு பொருளின் இருப்பும் அதன் மூலப்பொருளின் நிலைமாற்றத்தால் சன்னம் சன்னமாக மாறிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக மனிதன், மிருகம், பறவைகள் அனைத்தும் செல்களினால் ஆனது. செல்கள் மூலக்கூறினால் ஆனது. மூலக்கூறுகள் அனுக்களினால் ஆனது. அனுக்களின் மூலம் ஒளித்துகள்களினால் ஆனது. அந்த மூலப் பொருளும் இன்னொரு மூலப் பொருளை சார்ந்திருக்கிறது. இப்படி ஆதி மூலப் பொருளை (Materia Prima) நோக்கிய அறிவுலக பயணத்தில் வெகு விரைவிலேயே புலன் உணர்வுகளின் எல்லை வந்து விடுகின்றது. அதற்கு மேல் மூலப்பொருளை அறிவதில் ஒரளவு அறிவியல் சித்தாந்தங்கள் நமக்கு உதவுகிறது. அந்த அறிவியல் தத்துவங்கள் பொருள்கள் அனைத்தின் மூல உள்ளமை ஒன்றாக இருக்கக் கூடிய சாத்தியத்தை ஓரளவு ஒப்பு கொள்கின்றது. அதாவது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களும் தன்னுடைய இருப்புக்கு தான் அல்லாதவற்றின் இருப்பைத்தான் சார்ந்துள்ளது. அதாவது சுயமான இருப்பில்லாமல் தான் இருக்கிறது. ஆனால் அனைத்துக்கும் உள்ளீடு வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு மூல இருப்போ தன்னைக் கொண்டே தான் உள்ளது.அந்த மூல உள்ளமையை பொருள்என்ற வரையறைக்குள் கட்டுபடுத்திச் சொல்ல முடியவில்லை. அந்த மூல உள்ளமை ஒன்றுக்கு மேல் இருந்திருந்தால் அவை ஒன்றை ஒன்று மிகைக்க தலைப்பட்டிருக்கும் பிரபஞ்ச அமைப்பில் - இயக்கத்தில்  ஒரு ஒழங்கு இருக்கிறதே அந்த நிலை மாறி பெரும் குழப்பமாய் முடிந்திருக்கும். இப்படி ஒன்றே ஒன்றாய் இருக்கும் அந்த சுயமான உள்ளமையைத்தான் அல்லாஹ் - ஹக் என்று சொல்கின்றார்கள். 


மனிதனுக்கு அவனது இருப்பை வழங்கி கொண்டிருக்கும்  செல் மூலகூறு அனு இவற்றுக்கிடையே உள்ள நெருக்கத்தை விட நெருக்கமானது அவனுக்கும் அவன் மூலத்திற்கும் இருப்பை வழங்கும் இறைவனின் இருப்பு. இறைவன் சுயம்பு. சுயமாய் இருப்பவன் என்பதுடன் அனைத்து சிருஷ்டிகளுக்கும் இருப்பை வழங்குபவன்.

 எங்கும் இருக்கும் இறைவனின் தனித்தன்மையை இறைவேதமும், நபிமொழியும் பல இடங்களில் பறைசாற்றுகிறது. தெளிவுக்காக சிலவற்றை பார்ப்போம்.

எங்குத் திரும்பினாலும் இறைவனின் திருமுகம் இருக்கின்றது (2:115) என்ற வசனமும், (பூமியாகிய) இதன் மேலுள்ள ஒவ்வொன்றும் அழியக்கூடியதே மிக்க கண்ணியமும், வல்லமையும் கொண்டவனான உம்முடைய ரட்ஷகனின்(ரப்பின்) முகமே நிலைத்திருக்கும்.(55: 26,27) என்ற வசனமும் கால, நேர, இடம் என்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன், இன்னும் எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருக்க கூடியவன் இறைவன். இடையில் தோன்றி இடையில் மறைவது என்பது சிருஷ்டிகளின் நிலை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

வானங்களையும், பூமியையும் ஹக்கைக் கொண்டு படைத்துள்ளான். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.(16:3) என்கிறது இறைவசனம்.

இங்கே ஹக் என்றால் என்ன சிந்தித்து பாருங்கள். ஹக்கை விளங்காதவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன் என்கிறது இந்த வேத வசனம். ஒவ்வொரு சிருஷ்டியும் அவன் இருப்பின் அத்தாட்சி. அதை அககண்களால் பார்க்காதவர்கள் இணைவைப்பில் விழுந்து அதன் விளைவாக இத்மினான் எனும் அமைதியை இழந்து விடுவார்கள் என்பதை

"ஹல்கினில் ஹக்கை 
ஹக்காக காணாத வாழ்நாள்
துக்கமாமே" என பாடினார்கள் ஓர் ஆன்மீகச் செல்வர்.

வானங்களிலும், பூமியிலும் என்ன இருக்கின்றன என்பதைக் கவனித்துப் பாருங்கள்என்று (நபியே) நீர் கூறுவீராக, எனினும் நம்பிக்கைக்(ஈமான்) கொள்ளாத கூட்டத்திற்கு நம்முடைய அத்தாட்சிகளும் எச்சரிக்கையும் யாதொரு பலனையும் அளிக்காது.(10:101) என்கிறது இன்னுமொரு இறைவசனம்.

அல்லாஹ் வானம் பூமியின் நூராக இருக்கின்றான்.(24:35) என்பதற்கு அவனைக் கொண்டே சகலவிதமான சிருஷ்டிகளின் வெளிப்பாடும் இருக்கிறது என்பதாக இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் விளக்கமும் இங்கே நினைவு கூறத் தக்கது. (தப்சீர் ஹமீத் பாகம் 4 பக்கம் 828). 

அல்லாஹ்வை தூரமாக விளங்கக் கூடாது என்பதற்கு இன்னும் சில உதாரணங்களையும் பாருங்கள்.


"உன்னையே வணங்குகின்றேன்" என தொழுகையில் ஓதும் வசனங்களில் முன்னிருப்பவனை நோக்கி சொல்லப்படும் இலக்கண பாணியையை கவனியுங்கள்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழ நின்றால் தனது முகத்தின் முன்போ, வலப்புறத்திலோ துப்ப வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அவரது முகத்துக்கு முன் இருக்கிறான். அவரது இடப்புறத்தில் துப்பிக் கொள்ளட்டும். அல்லது அவரது பாதத்திற்கு கீழ் துப்பிக் கொள்ளட்டும்ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிமில் வந்துள்ள இந்த நபிமொழியுடன்

நிச்சயமாக நான் வானங்களையும், பூமியையும் படைத்த ஒருவனின் (உள்ளமையின்) பக்கம் என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் ஏகத்துவநேசன் (ஹனீஃப்). நான் இணைவைப்பவர்களில் சேர்ந்தவன் அல்ல (6:79) என இப்ராஹீம் நபி (அலை) கூறுவதாக திருமறையில் வரும் வார்த்தைகளையும் இணைத்து பாருங்கள். 

சுருக்கம் இது தான். வானம் பூமியில் உள்ள அழியக் கூடிய அனைத்து சிருஷ்டிகளுடனிருந்து, அந்த சிருஷ்டிகளின் போர்வையில் நம் தேவைகளை நிறைவேற்றக் கூடியவன்  யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர (இல்லல்லாஹ்). அதனால் நம் வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அல்லாஹ்வை தவிர (இல்லல்லாஹ்).

நிராகரிப்பாளர்கள் சிருஷ்டிகளுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்ற ஞானம் இல்லாததால் சிருஷ்டிகளில் காணப்படும் லாப நஷ்டம் தரக் கூடிய தன்மையைச் சிருஷ்டிகளுக்கே சொந்தம் என்று விளங்கி இருந்தார்கள், அவர்களிடம் பெருமானார் (ஸல்) (வானம், பூமியில்) இலாஹ்வாக இருப்பது (அல்லாஹ்வான) ஒரே இலாஹ் தான் 16:22 (إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ  ) என்ற ஏகத்துவ இறைச் செய்தியைக் கூறினார்கள்.

 உருவங்களின் பன்மையில் அவன் உருவமற்ற உள்ளமையின் ஒருமையை ஏகத்துவப்படுத்திக் காட்டினார்கள். அதிசயத்தில் எல்லாம் அதிசயமான அற்புதமல்லவா? விளங்காத உள்ளங்களுக்கு அது விந்தையானது


أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ

(என்ன இந்த முஹம்மது (ஸல்லலலாஹு அலைஹிவஸல்லம்)) எல்லா இலாஹ்வையும் ஒரு இலாஹ் என்றா ஆக்கி விட்டார். விந்தையாக இருக்கிறதே? 38:5 என்ற நிராகரிப்பாளர்களின் வியப்பு குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக பொருளாதாரம், செயலாற்றல், பண்புகள் மற்றும் இருப்பு இவைகளின் ஏகபோக உரிமையாளன் அல்லாஹ். அந்த இறைமையில் அவன் தனித்தவன் (வஹதஹூ).

அனைத்து சிருஷ்டிகளுடன் அவனிருந்தாலும். சிருஷ்டிகள் அனைத்தையும் விட்டு தனித்தவன் (வஹதஹூ) அவன்.

வஹதஹு ஃபி ஜாத்திஹி ( உள்ளமையால் தனித்தவன்)

வஹதஹூ ஃபி ஸிபாத்திஹி (பண்புகளால் தனித்தவன்)

வஹதஹூ ஃபி அஃப்ஆலிஹி (செயல்பாட்டில் தனித்தவன்)

வஹதஹூ ஃபி ஆஸாரிஹு (உடமையினால் தனித்தவன்)

இவைகளை நல்லவிதமாக விளங்கி நாம் எங்கிருந்த போதும் நம் இருப்புக்கு மூலமான அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்ற உணர்வுடன் வாழ அல்லாஹ் நமக்கு  அருள் செய்வானாக! ஆமீன். 

பார்க்க: 
 
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment