தோழமையுடன்

Friday, August 3, 2012

குர்ஆன் கூறும் ஏகத்துவ மெய்ஞானம் ஓர் எளிய விளக்கம் – 3


இயக்கம்

 பொருளாதார ஆதிக்கம் சிருஷ்டிகளிடம் காணப்படுவதால் தான் தேவையின் போது மனம் சிருஷ்டிகளின் பக்கம் சாய்கிறது.

 சிருஷ்டிகள் இயங்குவதால் தான் பொருளாதார ஆதிக்கம் நிலைநிறுத்தப்படுகின்றது. தேவைகள் நிறைவேறுகின்றன.இன்னும் நன்மையோ தீமையோ செய்யப்படுகின்றது.

ஆனால் இயங்குவதற்கு சக்தி தேவை.சிருஷ்டிகளுக்கு சுயசக்தி இல்லை.

சக்தி என்பது எந்த வடிவில் உணரப்பட்டாலும். அதன் மூலஊற்று இறைசக்தியே ஆகும்.சிருஷ்டிகளுக்கு சுயசக்தி இல்லை என்பதனால் அவைகள்  தன் தானே இறைவனின் சக்தியின்றி எந்த ஒரு வேலையையும் சிறிதளவேனும் செய்ய முடியும் என்று எண்ணுவது இறைநெருக்கத்தை விட்டு தூரமாக்கும் மறைமுகமான இணைவைப்பாகும் (ஷிர்கே கஃபி).

எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான்  என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள். (த்ஹுர் ரப்பானி பக்கம் 87)


அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது : (தேவைகளை நிறைவேற்றக் கூடிய) உங்கள் இறைவன் ஒரே இறைவனே. அவனைத் தவிர வேறு இறைவனில்லை. (2:163) என்ற வசனம் மதினாவில் அருளப்பட்ட போதுஅனைத்து மக்களுக்கும் எவ்வாறு ஓர் இறைவன் போதுமாவான்?” என்று மக்காவில் குறைசி இறைமறுப்பாளர்கள் கூறினர். அப்போது தான் கீழ்கண்ட இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான்.(நூல்: தப்ஸீர் இப்னு அபி ஹாத்திமில் உள்ளதாக தப்ஸீர் இப்னு கஸீரில் குறிப்பிடபட்டுள்ளது).

2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.

2:165. அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்; அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது; நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).

ஏகத்துவ ஞானமுடைய இறை நம்பிக்கையாளருக்கும், இணை வைப்பவருக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை இந்த இறைவசனம் தெளிவு படுத்துகிறது. அது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

சிருஷ்டிகள் மூலம் தான் தேவைகள் நிறைவேறுகின்றது. மேகம் மழையை வருஷித்தது, காற்று கப்பலை செலுத்துகிறது, சோறு பசியை போக்கிவிட்டது. தண்ணீர் தாகத்தை தீர்த்து விட்டது. வெள்ளம் வேளாண்மையை அழித்துவிட்டது, மருந்து பிணியை போக்கிவிட்டது என்று இறைவனது  செயல்களை இரவலாக, சம்பந்தப்பட்ட வஸ்துக்களுடன் இணைத்து (நிஸ்பத்து செய்து) ஒப்பிட்டு கூறுவது நமது தினசரி வாழ்கையில் நடைபெறும் சம்பவமாக உள்ளது. இதற்கு  இஸ்னாதேமஜாஸீஎன்று சொல்லப்படும். இது ஆகுமானதே. ஆனால் இங்கே சிருஷ்டிகள் மூலம் கிடைப்பது அல்லாஹ்வின் உதவி என்ற ஏகத்துவ ஞானம் இல்லாத இறைநம்பிக்கையற்றவர் இந்த இடத்தில் இணைவைப்பில் விழுகிறார்.

இணைவைப்பவர் சிருஷ்டிகளுக்கு சுய சக்தி இருப்பதாக நம்புவதால், இந்த தேவைகளை எல்லாம் சிருஷ்டிகளே நிறைவேற்றுவதாக எண்ணி  சிருஷ்டியை இலாஹ் என்கிறார். இறைமையின் அந்தஸ்த்தில் சிருஷ்டியை நேசிக்கிறார். அதாவது வணங்குகிறார்.

அதற்கு மாறாக இறை நம்பிக்கையாளரோ சிருஷ்டிகளின் செயல்களில் இறைசக்தியை நோட்டமிடுகிறார்.  சிருஷ்டிகளின் மூலம் இறை உதவியை பெற்றுக் கொள்கிறார். அல்ஹம்துலில்லாஹ் என புகழை இறைவனுக்கு சமர்பிக்கின்றார். உண்மையில் (ஹகீகத்தில்) மழையை பொழியச் செய்பவன், காற்றைக் கொண்டு கப்பலை செலுத்துபவன், பசியை போக்கி வைப்பவன், தாகத்தை தீர்த்து வைப்பவன், வியாதியை உண்டாக்குபவன் , குணப்படுத்துபவன் ஆக எல்லாவற்றையும் செய்து முடிப்பவன் அல்லாஹ் ஒருவனே. ‘சக்தியடங்களும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது’ என்பதை இறைநம்பிக்கையாளர் நல்ல முறையில் விளங்கி இருக்கின்றார். அதனால் சிருஷ்டிகளின் செயலில் இறைவனின் குவ்வதைசக்தியை சம்பந்தபடுத்தி  சிருஷ்டிகளின் மூலம் லாபமோ, நஷ்டமோ கொடுப்பவன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை என இறைவன் ஒருவனையே இலாவாகவணக்கத்திற்குரியவனாக நேசிக்கிறார்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், அறிஞர்கள், வலிமார்கள், நபிமார்கள் என அனைத்து சிருஷ்டிகளின் மூலம் இறைவனது உதவியை பெறுகிறார்.

பெற்றோர்களுக்கு முன்பு சமமாக அமராதீர்கள்.

மூமீன்களின் முன்பு உங்கள் புஜங்களை உயர்த்தாதீர்கள்.

 உயிரையும், உடமையையும் விட பெருமானாரை நேசிக்க வேண்டும், 

என மார்க்க வழிகாட்டலின் படி சிருஷ்டிகளை நேசிக்கிறார். அல்லாஹ் மதிக்க சொன்னவர்களை மதிக்கிறார். இறைவனை மட்டுமே வணங்குகிறார்.

பண்புகள்:

ஜீவிதம், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பார்வை, பேச்சு முதலியன சுயமான உள்ளமை உடையவனாகிய இலாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. தேவைகளை நிறைவேற்றும் இலாஹ்வுக்கு இந்த ஏழு பண்புகளும் தேவை.

அல்லாஹ்-அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இலாஹ் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்
( நிலைநிறுத்துபவன்) (2:255)

அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான்  செவியேற்பவன், பார்ப்பவன்.42:11

போன்ற வசனங்கள் இதை உறுதி செய்கிறது. இந்த வசனங்களில் வரும் “அல்” என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வரும் The (superlative degree) போன்றது. He is the best என்றால் அவன் ஒருவன் தான் சிறந்தவன் என அர்த்தம். அல் ஹய்யு, அல் கய்யும், அஸ்ஸமிவுன் பஸீர் போன்ற வார்த்தைகளும் ஜீவிதம், நிலைத்தல்,நிலைநிறுத்தல், பார்வை, கேள்வி முதலிய தன்மைகளை அவனுக்கு மட்டுமே சொந்தம் என பண்புகளின் அந்த ஏகபோக உரிமையில் அவன் தனித்தவன் (வஹதஹு) என்பதை குறிக்கிறது.

ஜீவிதம், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பார்வை, பேச்சு போன்ற பண்புகள் அல்லாஹ்வுக்கு இருப்பது போல் இல்லை என்றாலும் ஒரு சிறிய அளவிலாவது சிருஷ்டிக்கும் இருக்கிறது என விளங்கினால் ஓரளவு ஒப்பாகுதல் (முஷாபஹத்) என்ற நிலையில் ணை வைப்பு நிகழ்கிறது

அதே நேரத்தில், "அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்" .76:2 என்பதன் மூலம் அல்லாஹ்வின் குணங்கள் அடிமையில் பிரதிபலிப்பதை அறியலாம்.

அல்லாஹ்வின் குணங்கள் அடிமையில் பிரதிபலிப்பதால் அடியான் அந்த குணங்களின் சொந்தக்காரனாக ஆகி விடவில்லை. அந்த குணங்களைக் கொண்டு பயன் பெறும் ஒரு இரவல் (அமானிதமான) நிலை தான் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை அரபியில் "இழாஃபத் - இணைப்பு" என்பார்கள்.
உதாரணமாக மின்சக்தியினால் மின் விசிறி இயங்குகிறது. மின்சாரத்தின் தயவின்றி ஒரு நிமிடம் கூட மின்விசிறி தனித்து இயங்க முடியாது. எப்படி மின்சாரம் பத்து வருடங்கள் மின் விசிறியுடன் இருந்து மின் சக்தியை வழங்கினாலும் மின் விசிறி மின்சக்தியைச் சொந்தம் கொண்டாட முடியாதோ அதைப் போல வாழும் காலமெல்லாம் இறைவனின் குணங்கள் நம்மில் காணப்பட்டாலும் - அவைகளைக் கொண்டே நாம் இயங்கினாலும் அவை நமக்குச் சொந்தமானவை அல்ல. உதாரணமாக அறிவு என்னும் குணத்தை எடுத்துக் கொள்வோம். எந்த வித அறிவும் அற்ற நிலையில் தான் நம் குழந்தைப் பருவம் தொடங்குகிறது. இன்று எத்தனை பெரிய அறிஞனாக இருப்பவரும் குழந்தைப் பருவத்தில் மலத்தில் கை விட்டு மூத்திரத்தில்சப்புகொட்டிய காலத்தைக் கடந்து வந்தவர் தான். வயோதிகம் என்னும் நிலையில் இந்த அறிவின் தெளிவு சன்னம் சன்னமாக குறைவதையும் நாம் பார்க்கின்றோம்.

ஆக வாழும் காலத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளதுஉணர்தல்” (perception) என்னும் நுகர்வுரிமை (consuming rights) தான் அஸலான உரிமைத்தனம் (original ownership) அல்ல

அல்லது உங்கள் கேள்வி, பார்வையின் மாலிக் (எஜமான் - உரிமையாளன்) யார்?” (10:31) என கேள்வி எழுப்பி தன் ஏக போக உரிமையை உணர்த்துகின்றான் வல்ல இறைவன்.

6:46. “அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் - அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இலாஹ் கொடுப்பான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக; (இவ்வாறு இருந்தும்) பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்" என்கிறது வேதவரிகள்.

ஆக ஜீவிதம், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பார்வை, பேச்சு போன்ற பண்புகள் யாரிடம் காணப்பட்டாலும் அவை அந்த சிருஷ்டிகளுக்கு ஒரு வினாடி கூட சொந்தமானவையல்ல, ஏக போக நாயனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தம். ஆக இந்த ஏழு பண்புகளின் மூலமாக எங்கு தேவைகள் நிறைவேறினாலும் அங்கே தேவையை தனது பண்புகள் மூலம் நிறைவேற்றுபவன் யாருமில்லை இல்லல்லாஹ்.

 இன்ஷாஅல்லாஹ் தொடரும்..

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment