தோழமையுடன்

Friday, August 3, 2012

குர்ஆன் கூறும் ஏகத்துவ மெய்ஞானம் ஓர் எளிய விளக்கம் – 2

நன்மைகளை தருதல், தீமையிலிருந்து காத்தல் என்ற அனைத்து வகை தேவைகளையும் நிறைவேற்றும் தன்மைக்கு பெயர் தான் இறைத்தன்மை - இறைமை - ‘உலூஹிய்யத்’ என பார்த்தோம்.

அந்த இறைமையின் அடிப்படையை இப்போது விளங்க முற்படுவோம்.


இறைமையின் (உலூஹிய்யத்) அடிப்படைகள்:

ஆன்மீக அறிஞர்கள் தேவைகளை நிறைவேற்றும் இறைமையின் (உலூஹிய்யத்) அடிப்படையாக நான்கு அம்சங்களை கூறுகின்றார்கள்


அந்த  நான்கு அம்சங்களும் யாருக்கு சொந்தமோ அவன் தான் இலாஹ்.
அவை  என்ன?

1.   உள்ளமை அல்லது இருப்பு (Existence)

2.   உயிர், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பேச்சு, பார்வை முதலிய பண்புகள்.

3.   செயல்படும் சக்தி.

4.   பொருளாதார உடமை மற்றும் உரிமை.

இவை தான் இறைமையின் தகுதியா? 

இந்த நான்கும் தான் சிருஷ்டிகளில் காணப்படுகின்றதே அப்படி என்றால் சிருஷ்டிகளும் இலாஹ்வா? என திகைப்பு ஏற்படுகின்றது. ஏனெனில் நாம் சிருஷ்டிகளைப் பார்க்கின்றோம் அவைகளுக்கும்

ஒரு இருப்பு (Existence) இருக்கின்றது.

உயிர், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பேச்சு, பார்வை முதலிய பண்புகள் சிருஷ்டிகளில் காணப்படுகின்றது.

சக்தி கொண்டு செயல்படுகின்றது.

பொருளாதார உரிமைகளுடன் உலா வருகின்றது.

ஆக உலூஹிய்யத்தின் நான்கு அம்சங்களும் சிருஷ்டிகளிடமும் காணப்படுகின்றது.

இன்னும் இந்த நான்கு அம்சங்களையும் சிருஷ்டிகளில் பார்க்கும் போது தான் சிருஷ்டிகளின் மீது அச்சமும், ஆதரவும் வருகின்றது.

இறைநம்பிக்கையின் பிரதான அடிப்படையே அச்சத்திற்கும் ஆதரவுக்கும் தகுதியானவனாக இறைவனை மட்டுமே  தரிப்படுத்தும் விசயமாகும்.

ஆக இந்த எண்ணற்ற சிருஷ்டிகளின் அச்சத்திலிருந்து மீளும் வழி என்ன?

எண்ணற்ற வாசலில் மானசீகமாக மன்றாடி நிற்கும் கேவலத்திலிருந்து மீளும் வழி என்ன?

நபிமார்கள் வழியாக வந்து  வலிமார்கள் போதனையின் மூலம்  பெறப்படும் ஏகத்துவ இறைஞானம் தான் அந்த மீட்சியின் வழி.

சிருஷ்டிகளில் உள்ளமை, பண்புகள், சக்தி, இன்னும் பொருளாதார உடமை ஆகிய உலுஹிய்யத்தின் நான்கு அம்சங்களும் காணப்பட்டாலும் அவை சிருஷ்டிகளுக்கு சுயமானவையல்ல. ஏகபோக நாயனாகிய இறைவனுக்கே சொந்தமானவை. அவை சிருஷ்டிகளை வாழ வைப்பதற்காக இறைவனால் இடைவிடாது வழங்கபடுபவை என்பதை விளங்க வேண்டும். அப்படி விளங்கி இறைவனுக்கு சொந்தமானவையாக ஒருமைப்படுத்துவது தான் ஏகத்துவத்தின் அடிப்படை.

அப்படி இல்லாமல் இவைகள் சிருஷ்டிக்கு சுயமாக இருக்கிறது என விளங்கினால் அது 'ஷிர்க்' எனும் இணைவைப்பில் தான் முடியும்.

இறைவேத வசனங்களின் வெளிச்சத்தில் இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.

பொருளாதார உரிமையும் உடமையும்

கார்லோஸ் ஸ்லிம் ஹெலு – 74 பில்லியன் டாலர் – நம்பர் 1

பில் கேட்ஸ் – 56 பில்லியன் டாலர் – நம்பர் 2

வாரண் பஃப்பெட்  - 50 பில்லியன் டாலர் – நம்பர் 3

இவ்வாறு உலகின் Top Ten பணக்காரர்களை அவர்களுடைய சொத்தின் நிகர மதிப்பின் (Net Worth) அடிப்படையில் பட்டியலிடுகிறது ஒரு புள்ளியியல் நிறுவனம்.

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.             ( 20:6) என்கிறது இறைவசனம்.

இந்த இரண்டையும் ஒன்றுபடுத்தும் இணைப்பு தான் ஏகத்துவம்.

பொருளாதாரம் முற்றிலும் இறைவனுக்குத் தான் சொந்தம். சிருஷ்டிகளிடம் ‘இரவல்’ நிலையில் தான் காணப்படுகின்றது. இவ்வாறு சிருஷ்டிகளிடம் காணப்பட்டாலும் அதன் ஆதிக்கம் இறைவனிடம் தான் உள்ளது என்பதே விளங்க வேண்டிய உண்மை. இதை ஓரளவு நாம் விளங்கி இருக்கின்றோம். அதற்கான ஆதாரங்களையும் அவ்வப்போது காண்கின்றோம்.

என் நணபர் ஒருவர் தான் அணிவதற்கு ஜுப்பா துணி வாங்கினார். தையல் கடையிலிருந்து தைத்து ஜுப்பா வீட்டுக்கு வரும் முன்பே அவர் இறந்து கஃபன் ஆடையுடன் அடக்கமாகி விட்டார். அவர் தைத்த ஜுப்பா அவரது இல்லத்தாரால் ஒரு ஏழை நண்பருக்கு வழங்கப்பட்டது.  இறந்தவரின் ஃபாத்திஹாவுக்கு ஜுப்பாவுடன் அந்த ஏழை நண்பர் கலந்து கொண்டார். இது தான் நமக்கு நம் பொருளாதாரத்தில் உள்ள ஆதிக்கம்.

ஒரு பூகம்பம், பொருளாதார நெருக்கடி எனும் சுணாமி பல பணக்காரர்களை  ஒன்றுமில்லா ஓட்டாண்டியாக்கி விட்டது.

இவை எல்லாம் எப்போதாவது நாம் படிப்பினை பெரும் சம்பவங்கள். பொருளாதாரம் முற்றிலும் இறைவனுடைய ஆதிக்கத்தில் மட்டும் தான் இருக்கிறது.  எத்தனை கோடி சிருஷ்டிகளிடம் காணப்பட்டாலும் அந்த சிருஷ்டிகளின் போர்வையில் ஏக போக உரிமையாளனாக அல்லாஹ் தான் இருக்கின்றான் என்பதை உலூஹிய்யத்தின் மற்ற அம்சங்களையும் விளங்கும் போது தான் தெளிவாக உணர முடியும்.  அவைகளை நோக்கி சுட்டி காட்டும் விதமாக  இறை கூற்றாக எழுதப்பட்ட இந்த கவிதையை படியுங்கள்:

ரமளான்!
இது ஈகையின் மாதம்!
மன்னாதி மன்னவன் நான் !
எல்லையற்ற என் கருணையின் பிரவாகத்தால்
இல்லாமையில் இருந்தவைகள்
காட்சிக்கு வந்தது!
எல்லா காலி பாத்திரங்களும்
என்னால் நிரம்பி வழிகின்றது.

திரும்பும் திசை எல்லாம் என் முகமிருக்க
எனை விட்டு எங்கே திரும்புகின்றாய்!
என்னிடமே கேள்!.
எனை கொண்டே வாங்கு!
வாங்கியதில் எனைக் கொண்டே வழங்கு!
எளியவனிடம் முகம் சுளிக்காதே!
என் தயவின்றி யாசகன் தனியே வருவானா?
நீயும் யாசகனும் தனித்திருந்தாலும்
மூன்றாவதாக நானிருக்கின்றேன்
உன்னுடனும்
அவனுடனும்
என் முகம் காண ஆசித்து யாசகம் வழங்கினால்
அவனிடமும் என்னை பெற்றுக் கொள்வாய் (1).
என் கருணையின் பிரவாகத்தால்
எல்லா பாத்திரங்களும்
நிரம்பி வழிகின்றது.
தொடருங்கள் எகத்துவத்தை விளங்க விளங்க இந்த கவிதையின் ஆழமான அர்த்தம் நமக்கு புரியும்இன்ஷாஅல்லாஹ்.

(1) ஃபவஜத்தனி இன்தஹு என்கிறது நபிமொழிஉங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment