தோழமையுடன்

Thursday, August 2, 2012

குர்ஆன் கூறும் ஏகத்துவ மெய்ஞானம் ஓர் எளிய விளக்கம் - 1

 பொதுவாக என் எல்லா ஆன்மீக கட்டுரைகளுமே எனது ஷெய்கு ஃபைஜிஷாஹ் நூரி(ரஹ்) அவர்களின் ஆன்மீக போதனையில் நான் விளங்கியதை அடிப்படையாக கொண்டது. ஆகவே இதன் நிறைகள் அவர்களையே சாரும். அல்ஹம்துலில்லாஹ். இதன் குறைகள் என் விளக்க குறைவாலோ, நான் சொல்லும் எனது பாணியில் விளைந்த விளைவாலோ இருக்கலாம். அந்த வகையில் இந்த கட்டுரை உபதேசமல்ல. ஒரு பகிர்வே. தவறுகளை தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளப்படும். 

வஸ்ஸலாம்,
ஒ.நூருல் அமீன் ஃபைஜி,


ஒர் இறை நம்பிக்கையாளனுக்கு முதல் தேவை தான் யாரை வணங்குகின்றோமோ அந்த இறைவனைப் பற்றிய விளக்கம்.

அல்லாஹ் என்றோ பரம்பொருள் என்றோ கர்த்தர் என்றோ அழைக்கப்படும் இறைவனைப் பற்றிய உங்கள் விளக்கம் என்ன என்றால் நாம் என்ன சொல்வோம்?

உலகில் உள்ள எல்லா சிருஷ்டிகளையும் படைத்தவன்.

வானம், மலை, பூமியை படைத்தவன்.

வானத்திலிருந்து மழையை தருபவன். பூமியிலிருந்து தானியங்கள், காய், கனி வர்க்கங்களை விளையச் செய்து நமக்கு உணவளிப்பவன்.

அர்ஷின் அதிபதி.

வானம், பூமி இன்னும் அகிலத்தின் ஆட்சியாளன்.

ஆபத்துகளில் அழைத்தால் உதவி செய்யக் கூடியவன்.

இது போன்ற சின்ன சின்ன விளக்கங்கள் தருவோம்.

இந்த அளவு எளிய விளக்கங்கள் மட்டுமே ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு போதுமா?

இந்த அளவு எளிய விளக்கத்தை அரபக நிராகரிப்பாளர்களும் கூட கொண்டிருந்தார்கள் என்பதை இறைவேத வசனங்கள் கூறுகின்றது.

குர்ஆன் கூறும் அரபக  நிராகரிப்பாளர்களின் இறைநம்பிக்கை:

29:61. மேலும், (நபியே!) நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்தித் தந்தவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?


29:63. இன்னும், அவர்களிடம்: வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராகில்: அல்லாஹ்என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியதுஎன்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.  

29:65. மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.


23:84. “நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு (ச் சொந்தம்?“ என்று (நபியே!) நீர் கேட்பீராக!

23:85. “அல்லாஹ்வுக்கேஎன்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக!

23:86. “ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.

23:87. “அல்லாஹ்வேஎன்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!

23:88. “எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)என்று கேட்பீராக.

23:89. அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)என்று கூறுவார்கள். (உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.

23:90. எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம்; ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள்.

மேற்கூறிய வசனங்களைலிருந்து யாரை நிராகரிப்பாளர்கள் என கூறுகின்றோமோ அவர்கள் அல்லாஹ்வை வெறுக்கவுமில்லை. அல்லாஹ்வை மறுக்கவுமில்லை. அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகிறது.

 அல்லாஹ்வை எப்படி ஏற்றுக் கொண்டிருந்தார்கள்? அல்லாஹ் தான் பிரபஞ்சத்தை படைத்தாளும் இறைவன் என ஏற்றுக் கொண்டிருந்தார்கள். 
சரி, அல்லாஹ்வை இறைவனாக ஏற்று கொண்டவர்கள் வணக்கத்தில் விக்கிரகங்களையும், சூரிய சந்திரனையும் ஏன் பங்காளியாக்கினார்கள் என்பதை பின் வரும் வசனம் விளக்குகிறது:

39:3. அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

மேற்கூறிய இறைவசனங்களிலிருந்து  இருந்து  இந்த  விசயங்கள் பெறப்படுகின்றது.

நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் எனும் பிரபஞ்சத்தை படைத்தாளும் இறைவன் சிருஷ்டியை விட்டு தனித்து தூரமாக அர்ஷில் இருந்து கொண்டு இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்கிறான் என விளங்கி இருந்தார்கள்.அப்படி தூரமாக இருக்கும் அல்லாஹ்வை நெருங்குவதற்கு விக்கிரகங்களை இடைசாதனமாக (வசிலாவாக) விளங்கினார்கள். 

குறிப்பு: வசீலா மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்றாலும் அதை தேர்ந்தெடுத்த முறை தான் தவறு என்பதைஅன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது.(34:23) என்ற வசனம் சுட்டிக் காட்டுகிறது.

அடுத்து சிருஷ்டிகளில் தேவையை நிறைவேற்றும் வல்லமை இருப்பதை பார்த்தவர்கள்  அந்த தேவையை நிறைவேற்றும் தன்மையை அந்த சிருஷ்டிக்கே சொந்தம் என விளங்கினார்கள். 
 இங்கேநினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் அல்லாஹ்வை சிருஷ்டிகளை விட்டு பிரித்து தனியே தூரமாக விளங்கியதால் தான் சிருஷ்டிகள் தன் தானே தேவையை நிறைவேற்றுவதாக விளங்கினார்கள். இதை 'கைரியத்தே மஹஸ்' என்பார்கள். 

அப்படி விளங்கியதால் என்ன ஆனது?

அல்லாஹ் பிரபஞ்சத்தை படைத்தாளும் பேறிறைவன் என்றும்.

இந்த விக்கிரகங்கள் இருக்கிறதே இவைகள் எங்கள் இலாஹ். அதாவது, தங்கள் தேவையை நிறைவேற்றக் கூடிய தெய்வம்  என்றும் விளங்கினார்கள். அதனால் வணங்கினார்கள்.

மேற்கூறிய வசனங்களுடன் பின் வரும் இறைவசனங்களையும்  இணைத்து பாருங்கள் இந்த உண்மை விளங்கும்:

19:81. (அவர்கள்) தங்களுக்காக (உதவி செய்ய) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்!

36:74. எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இறைத்தன்மை ( உலூஹிய்யத்) என்றால் என்ன?

அரபியர்களின் வழக்கில் தேவையை நிறைவேற்றக் கூடிய தன்மையை இறைத்தன்மைஉலூஹிய்யத் என அழைத்தார்கள். அந்த தேவையை நிறைவேற்றும் (உலூஹிய்யத்) தன்மையை உடையவனை இலாஹ்வணக்கத்திற்குரியவன் என கொண்டார்கள். குர் ஆனிலும் இறைவன் பல்வேறு தேவைகளை சொல்லிக் காண்பித்து இந்த தேவைகளையெல்லாம் நிறைவேற்றக் கூடிய இலாஹ்’ என்னைத் தவிர யாரும் இருக்கின்றானா? என கேள்வி எழுப்புகின்றான். (பார்க்க ஆயத் : 6:46, 27: 6-64, 28:70 -72)

மனிதர்களின் கோடான கோடித் தேவைகளையும் இந்த இரண்டு பிரிவில் அடக்கிவிடலாம். ஒன்று லாபத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தது நஷ்டத்திலிருந்து காக்கப்பட வேண்டும். இந்த இரண்டு வகைத் தேவைகளை நிறைவேற்றுபவன் தான் இலாஹ்-தெய்வம்

லாபம், நஷ்டம் தரும் தன்மையைத் இறைத் தன்மை, வணக்கத்துக்குரிய தன்மை என   குர்ஆனும் குறிப்பிட்டு லாப நாஷ்டம் கொடுக்கும்  வல்லமை சிருஷ்டிகளுக்கு இல்லை என்ற வாதத்தை முன் வைக்கிறது

5:76. அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்த தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.

22:12. இவர்கள் தங்களுக்கு யாதொரு நன்மையோ, தீமையோ செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவைகளை (உதவிக்கு) அழைக்கின்றார்கள். இது வெகு தூரமான(தொரு) வழிகேடாகும்.

இறைவனைத் தவிர யாரும் லாபமோ, நஷ்டமோ அனுவளவும் பிறருக்கு செய்ய முடியாது என்பது குர்ஆன் கூறும் உண்மை.

அதே நேரத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது நாமறிந்த இன்னொரு உண்மை.

துரும்பின் மூலம் பல்குத்தும் உதவியையும் செய்வது இறைவன் என்பது
தவ்ஹீது எனும் ஏகத்துவம். இந்த மகத்தான ஏகத்துவ உண்மையை அடையா விட்டால் மேற் கூறிய இரண்டில் ஒரு கூற்று பொய்யென்றாகி விடும்.

சிருஷ்டிகளுடனிருந்து லாபம், நஷ்டம் தரும் இலாஹ் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்ற ஏகத்துவ நிலையை விளக்கியதும் தான் முஹம்மது ரசூலுல்லாஹ்விற்கு எதிராக சொந்தக் கோத்திரமே வாளை உருவியது.

குர்ஆனின் அடிப்படையில் இறைமையின் அடிப்படை என்ன? என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment