தோழமையுடன்

Thursday, January 5, 2012

சுற்றம் சூழ வருக!


சேக்கலா மரைக்காரு ஊட்டு கல்யாணம்னா சும்மாவா?சிக்கனமா ஜாம் ஜாமென  நடந்தது

 நாங்கள் அழைத்த எல்லோரும் தவறாமல் சுற்றம் சூழ கலந்து கொண்டார்கள்.


சேக்கலாமரைக்காரு எனும் சேக் அலாவுதீன் மரைக்காயர் என் சீதேவி வாப்பா

வாப்பாவுக்கு எங்களைவிட ஊர்தான் முக்கியம்.
 ஊர் ஊரென்று பரம்பரை வீடு, நிலமெல்லாம் விற்று ஊருக்காகவே செலவழித்து எங்களுக்காக ஒரு பைசா மிச்சம் வைக்காவிட்டாலும், என்னை ஹைஸ்கூலுக்கு மேல் படிக்க வைக்காவிட்டாலும் கூட ஊர் மக்களிடையே நிறைந்த மரியாதையை சேர்த்து வைத்திருந்தார். அந்த மரியாதையினால்தான் ஐநூத்து சொச்சம் பேர் கொண்ட எங்கள் ஊரே திரண்டு வர என் அன்பு மகளுக்கு கல்யாணம் ஜாம் ஜாமென  நடந்தது. நீங்களே சொல்லுங்க ஊரே திரண்டு வந்து நடத்த கல்யாணத்துல நான் ஒருவன் மட்டும் கலந்து கொள்ளாதது பெரிய குறையா என்ன?.

திருமணத்தை நடத்த மரியாதை மட்டுமே போதுமென்றால் நானும் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே துபாயிலிருந்து ஊர் சென்று எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தி இருப்பேன் கூடவே பணமும் தேவைப்பட்டதால் என் மாதசம்பளம், வெக்கேசன் செட்டில்மெண்ட் லொட்டு லொசுக்கு என போட்டிருந்த அன்ட்ராயர் வரை முழுமையாக இந்திய ரூபாயில் மாற்றி அனுப்பி விட்டேன்

இன்னைய தேதியிலே கல்யாணத்த சிறப்பா நடத்துற தெம்பு என்னை விட நான் அனுப்புற ரூபாவுக்குத் தான் இருக்குங்குறப்ப நான் எப்புடி முந்திகிட்டு போறது மதிப்புக்குரிய பெரியவர் ரூபா மரைக்கார என் சார்பில அனுப்பிசிட்டேன். கூடவே கம்பெனியில் எனக்கு லீவ் தர மாட்டேனுட்டாங்கன்னு ஒரு பொய்யையும் சொல்லி வச்சேன்.

அடுத்ததாக,

ஊர் அழைக்க, நான் இல்லாத குறை தெரியாம எல்லாத்தையும் முன்னின்று நடத்த என் சின்னாப்பா சிராஜ்.

சோத்து சட்டிக்கு இன்சார்ஜ் அப்துல் ஹமீது.

பந்தி பறிமாறுவத பாத்துக்குறதுக்கு பொறுப்பு பக்கத்து வீட்டு சின்னத்தம்பி.

இப்படி செல்போனில் பேசி பேசியே.. இல்லை கெஞ்சி கெஞ்சியே எல்லாத்துக்கும் ஆளு, பொறுப்பு ஏற்பாடு செஞ்சாச்சு

எத்தனை வசதி இந்த செல்போன். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை போனிலேயே விசாரித்து , தகவல் பரிமாறி காரியங்கள் நடத்திட ஒருவழியாய் கல்யாணம் சிறப்பா முடிஞ்சுடுச்சு

அல்ஹம்துலில்லா! – எல்லா புகழும் இறைவனுக்கே! என எந்த சீரளிவும் இல்லாம சிறப்பா கல்யாணத்தை முடிச்சு தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தியவண்ணம் அசந்து படுக்கையில் சாஞ்சேன்.

 தூக்கம் வரவில்லை. மணியை பார்த்தேன் இரவு 12 அப்படின்னா இந்தியாவுல 1.30 . கலயாண வேளைட களைப்புல  என் மனைவி ஜுபைதா தூங்கி இருப்பாளோன்னு மனசுல நெனைக்கும் போதே கைகள் அனிச்சையாக செல்போனை இயக்கிட ஜுபைதா அதற்காகவே காத்திருந்தவள் போல் சட்டென போனை எடுத்தாள்.

"அட தூங்கலையா புள்ளே!" என கேட்டது தான் அதற்கு பிறகு
  அரைமணிநேரம் என்னை பேசவே விடவில்லை.

காலையில கருக்கல்ல எழுந்தலேர்ந்து எல்லாவற்றையும் விலாவாரியாக சொல்லி காட்டினாள். தொலைகாட்சியில் காம்பியர் பண்ணும் பெண்களைவிட சுவராஸ்யமாய் விவரித்தாள். இறுதியாக செல்லாச்சி மாமி அன்பளிப்பா செஞ்ச அஞ்சு பவுன் செயினில் நெகிழ்ந்தவளாய் செல்லாச்சி மாமிக்கு ரொம்ப நல்ல மனசு” என்றாள்.

நானும்ரொம்ப ரொம்ப.. நல்ல மனசுமாஎன ஆமோதித்தேன்.
 
“நீங்க கல்யாணத்துக்கு வராததுலே மாமிக்கு ரொம்ப கோபம். பெத்தபுள்ளைட கல்யாணத்துக்கு கூட வராம அழுத்தமா துபாயிலேயே இருந்துட்டானே, கல்லுமனசுமா ஒம் புருசனுக்குன்னு சத்தம் போட்டாஹ மச்சான் என்றாள் ஜுபைதா.

 “சாதரண கல்லா கருங்கல்லூன்னு நீ சொல்ல வேண்டியது தானே அஞ்சு பவுனு செயினை அன்பளிப்பு செஞ்ச மனுசிக்கு கல்லூன்னு சொல்லக் கூடவா உரிமை இல்லைன்னு சொன்னேன்.

“சரி நீ எப்படி இருக்கே! நான் இல்லாததாலே நீயே எல்லா வேலையும் செஞ்சு பெண்டு களண்டிருக்குமே!ஒனக்கு ஒடம்பு பச்சை கண்டிடுச்சுன்னு போன்ல தங்கம்மா ஆச்சி சொன்னாஹலே புள்ளே!.” என்றேன்.

நீங்கவேற புதுசா வாங்குன பச்சைக்கலரு பட்டு  பொடவை சாயம் போவுது மச்சான். சாயத்தை பாத்துட்டு அஹ அப்புடி சொல்லிட்டாஹன்னுசிரித்தாள்

நீங்க கவலைப்படலையே மச்சான்” என சுருதி மாறியவளிடம்.

மகள்ட கல்யாணத்த கொண்டாட என் கையால பக்கா பிரியாணி போட்டு எங்க ரூம்ல பக்கத்து ரூம்லன்னு 15 பேர கூப்பிட்டு விருந்து கொடுத்து அசத்திட்டோம்ல”ன்னு சொன்னதும் சந்தோசமாய் சிரித்தாள்.
Post a Comment